பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக இன்று டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 35-வது லீக் போட்டியில் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணியானது டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி அதிரடியாக விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் குவித்து பிரமாண்ட ரன் குவிப்பை வழங்கியது.
தோனி மற்றும் ரெய்னாவை பின்னுக்கு தள்ளிய கே.எல் ராகுல் :
டெல்லி கேபிட்டல்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக கே.எல் ராகுல் ஆட்டமிழக்காமல் 152 ரன்களையும், நிதீஷ் ரானா 91 ரன்களையும் குவித்து அசத்தினர். அதனை தொடர்ந்து 265 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணியானது விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல் ராகுல் 152 ரன்கள் குவித்ததன் மூலம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி அசத்தியுள்ளார். அதிலும் குறிப்பாக இன்றைய போட்டியில் அவர் அடித்த ரன்களின் மூலம் சி.எஸ்.கே வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் தோனி ஆகியோரை பின்னுக்கு தள்ளி ஒரு மிக முக்கிய சாதனை ஒன்றினையும் நிகழ்த்தியுள்ளார்.
அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : ஐ.பி.எல் போட்டிகளில் ஒட்டுமொத்தமாக அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் விராட் கோலி(8989), ரோஹித் சர்மா(7183), ஷிகர் தவான்(6769), டேவிட் வார்னர்(6565) ஆகியோர் முதல் நான்கு இடத்தில் இருக்கும் வேளையில் ஐந்து மற்றும் ஆறாவது இடத்தில் இருந்த சுரேஷ் ரெய்னா, எம்.எஸ். தோனி ஆகியோரை பின்னுக்கு தள்ளி கே.எல் ராகுல் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.
இதையும் படிங்க : முதல் இந்திய வீரராக ஐ.பி.எல் போட்டிகளில் இமாலய சாதனை நிகழ்த்திய கே.எல் ராகுல் – விவரம் இதோ
இந்த போட்டியில் அவர் அடித்த 152 ரன்களையும் சேர்த்து ஐ.பி.எல் போட்டிகளில் 5579 ரன்களுடன் அதிக ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தினை பிடித்துள்ளார். அவருக்கு அடுத்து ஆறாவது இடத்தில் சுரேஷ் ரெய்னா 5528 ரன்களுடனும், ஏழாவது இடத்தில் எம்.எஸ் தோனி 5439 ரன்களுடனும் உள்ளது குறிப்பிடத்தக்கது.



