இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 35-வது லீக் போட்டியானது அகமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் தங்களது அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.
கிரிஸ் கெயில், ஆண்ட்ரே ரசலுக்கு அடுத்து கே.எல் ராகுல் நிகழ்த்திய சாதனை :
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய டெல்லி கேபிட்டல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை குவித்தது. பின்னர் 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணி 19.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 204 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது டெல்லி கேபிட்டல்ஸ் அணி சார்பாக விளையாடிய நட்சத்திர வீரரான கே.எல் ராகுல் 14 பந்துகளை சந்தித்து நான்கு பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 28 ரன்கள் குவித்து அட்டமிழந்திருந்தார். அவர் இந்த போட்டியில் அடித்த ஒரு சிக்சர் மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் கெயில் மற்றும் ரசலுக்கு அடுத்து மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்தியுள்ளார்.
அதாவது இன்றைய போட்டியில் ஒரு சிக்சர் அடித்ததன் மூலம் கே.எல் ராகுல் ஐபிஎல் போட்டிகளில் 200 சிக்ஸர்களை பூர்த்தி செய்துள்ளார். இதன்மூலம் ஐ.பி.எல் போட்டிகளில் அதிவேகமாக 200 சிக்ஸர்களை அடித்த வீரர்களின் பட்டியலில் 3 ஆவது இடத்தினை பிடித்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 200 சிக்சர்களை அடித்த வீரர்களின் பட்டியலில் கிரிஸ் கெயில் முதலிடத்தில் உள்ளார். கிரிஸ் கெயில் தனது 69-ஆவது இன்னிங்சில் 200 சிக்ஸர்களை அடித்து இருந்தார். அதேபோன்று ஆண்ட்ரே ரசல் 97 இன்னிங்ஸ்களில் 200 ஐபிஎல் சிக்ஸர்களை அடித்திருந்தார்.
இதையும் படிங்க : 14 வயது 23 நாட்களில் ஐ.பி.எல் போட்டிகளில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி – மேலும் ஒரு சரித்திர சாதனை
இவர்கள் இருவருக்கு அடுத்து கே.எல் ராகுல் தனது 129-ஆவது இன்னிங்ஸில் 200 ஐபிஎல் சிக்சர்களை விளாசி அசத்தியுள்ளார். மேலும் ஐபிஎல் போட்டிகளில் 200-க்கும் அதிகமான சிக்சர்களை அடித்த ஆறாவது வீரராகவும் கே.எல் ராகுல் இந்தப் பட்டியலில் இணைந்திருக்கிறார்.



