மும்பையை புரட்டி எடுத்த கேஎல் ராகுல் அபார சதம்! ஐபிஎல் வரலாற்றில் பிரமிக்கவைக்கும் சாதனை

- Advertisement -

ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வெற்றிகரமான 2-வது வாரத்தைக் கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஏப்ரல் 16-ஆம் தேதி நடைபெற்ற 2 போட்டிகளில் மதியம் 3.30 மணிக்கு நடந்த 26-வது லீக் போட்டியில் லக்னோ மற்றும் மும்பை ஆகிய அணிகள் மோதின. ப்ராபோர்ன் மைதானத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய லக்னோவுக்கு தொடக்க வீரர்கள் குயின்டன் டி காக் மற்றும் கேப்டன் கேஎல் ராகுல் ஆகியோர் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அதிரடியான தொடக்கம் கொடுத்தனர்.

இதில் குயின்டன் டி காக் 24 (13) ரன்களில் அவுட்டாக அடுத்து களமிறங்கிய மனிஷ் பாண்டேவுடன் ஜோடி சேர்ந்த கேஎல் ராகுல் தொடர்ந்து அதிரடியாக பேட்டிங் செய்து 3-வது விக்கெட்டுக்கு 72 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தனது அணியை வலுவான நிலையை எட்ட வைத்தார். இந்த ஜோடியில் மனிஷ் பாண்டே 29 பந்துகளில் 6 பவுண்டரி உட்பட 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

கேஎல் ராகுல் மாஸ் சதம்:
இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து பட்டைய கிளப்பும் ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் மும்பை பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த நிலையில் அவரை அவுட் செய்ய கேப்டன் ரோகித் சர்மா வகுத்த அத்தனை திட்டங்களும் தோல்வியில் முடிந்தன. அதனால் கடைசி வரை மும்பையை புரட்டி எடுத்த கேஎல் ராகுல் 60 பந்துகளில் 9 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் உட்பட சதமடித்து 103* ரன்கள் விளாசி கடைசி வரை அவுட்டாகாமல் நின்றார். இதன் காரணமாக 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த லக்னோ 199 ரன்கள் குவித்தது. மும்பை சார்பில் அதிகபட்சமாக உனட்கட் 2 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதை தொடர்ந்து 200 என்ற பெரிய இலக்கை துரத்திய மும்பைக்கு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா 6 (7) ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளிக்க அடுத்ததாக களமிறங்கிய 18 வயது இளம் தென் ஆப்பிரிக்க வீரர் தேவால்ட் பிரேவிஸ் முதல் பந்தில் இருந்தே அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்தார். வெறும் 13 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட 34 ரன்களை பறக்க விட்டு திடீரென ஆட்டமிழந்த அவருக்கு பின்னேயே தடுமாற்ற ஆட்டத்தை வெளிப்படுத்திய இசான் கிசான் 13 (17) ரன்களில் அவுட்டாகி நடையை கட்டினார்.

- Advertisement -

மும்பை போராடி தோல்வி:
இதனால் 57/3 என சரிந்த மும்பையை அடுத்து களமிறங்கிய நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் 3 பவுண்டரி உட்பட 37 (27) ரன்களும் இளம் வீரர் திலக் வர்மா 26 (26) ரன்களும் எடுத்து காப்பாற்ற போராடினாலும் முக்கிய நேரத்தில் அவுட்டானார்கள். அதன் காரணமாக மும்பையின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியான வேளையில் நம்பிக்கை நட்சத்திரம் கைரன் பொல்லார்ட் 14 பந்துகளில் 1 பவுண்டரி 2 உட்பட அதிரடியாக 25 ரன்களும் ஜெயதேவ் உனட்கட் அதிரடியாக 14 (6) ரன்களும் எடுத்து போராடி கடைசி நேரத்தில் அவுட்டானார்கள்.

இதனால் 20 ஓவர்களில் 181/9 ரன்களை மட்டுமே எடுத்த மும்பை பரிதாபமாக தோல்வி அடைந்தது. இதன் காரணமாக 5 கோப்பையை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணி என சாதனை படைத்த மும்பை இந்த வருடத்தில் இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளிலும் தொடர் தோல்விகளை பெற்றுள்ளதால் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. தற்போதைய நிலைமையில் தனது அடுத்த 8 போட்டிகளில் தொடர்ச்சியாக வென்றால் கூட அந்த அணியால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது அசாத்தியமாகியுள்ளது அந்த அணி ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது.

- Advertisement -

லக்னோ சரித்திர சாதனை:
மறுபுறம் லக்னோவின் இந்த அபாரமான வெற்றிக்கு சதமடித்து முக்கிய பங்காற்றிய அதன் கேப்டன் கேஎல் ராகுல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அத்துடன் இதுவரை அவர் தலைமையில் 6 போட்டிகளில் பங்கேற்ற லக்னோ 4 வெற்றிகளை பதிவு செய்து 8 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறி வெற்றி நடைபோடுகிறது.

முன்னதாக இந்த போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீரர் மற்றும் லக்னோவின் கேப்டன் கேஎல் ராகுல் தனது 100-வது ஐபிஎல் போட்டியில் விளையாடினார். அப்படிப்பட்ட இந்த மைல்கள் போட்டியில் விஸ்வரூபம் எடுத்து மும்பையை புரட்டி எடுத்த அவர் அபார சதம் அடித்த காரணத்தால் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றிலேயே தனது 100-வது போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் என்ற மாபெரும் புதிய வரலாற்று சரித்திர சாதனையை படைத்தார்.

இதையும் படிங்க : போறபோக்க பார்த்தா அவர் ஒருத்தர் மட்டும் தான் 10 ஓவர் போடணும் போல – மட்டமான மும்பை ரசிகர்கள் கொந்தளிப்பு

கடந்த 2008 முதல் நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இதற்கு முன் விராட் கோலி, ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா என நிறைய ஜாம்பவான் நட்சத்திர வீரர்கள் 100 போட்டிகளில் விளையாடிய போதிலும் அதில் ஒருவர்கூட தங்களது 100-வது போட்டியில் சதம் அடித்ததில்லை. வரலாற்றில் 100-வது ஐபிஎல் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த வீரர்களின் விவரம் இதோ:
1. கேஎல் ராகுல் : 103*, மும்பைக்கு எதிராக, 2022*
2. பப் டு பிளேசிஸ் : 86, கொல்கத்தாவுக்கு எதிராக, 2021
3. டேவிட் வார்னர் : 68, பெங்களூருவுக்கு எதிராக, 2016.

Advertisement