
தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது இந்திய கிரிக்கெட் அணியானது பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடர் முடிவடைந்த கையோடு எதிர்வரும் நவம்பர் 30-ம் தேதி முதல் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் அந்த அணியை எதிர்த்து இந்திய அணி விளையாட காத்திருக்கிறது.
இந்த ஒருநாள் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை கடந்த சில தினங்களுக்கு முன்னர் பி.சி.சி.ஐ அறிவித்திருந்தது. அந்த அணியில் கே.எல் ராகுல் தலைமையில் 15 வீரர்களுக்கு இடம் கிடைக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் ஒரு சில வீரர்கள் காயம் காரணமாக இடம்பெறாமல் போனது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில் கேப்டன் சுப்மன் கில் மற்றும் துணை கேப்டனான ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவருமே காயம் காரணமாக இந்த ஒருநாள் தொடரில் இடம் பெறவில்லை. அதன் காரணமாக தற்காலிக ஒருநாள் கேப்டனாக அனுபவ வீரரான கே.எல் ராகுல் இந்திய அணியை வழிநடத்த காத்திருக்கிறார்.
இந்நிலையில் கே.எல் ராகுலுக்கு வழங்கப்பட்ட இந்த கேப்டன் பதவி தொடருமா? அல்லது இந்த தொடரில் மட்டும் தான் அவர் கேப்டனாக செயல்படுவாரா? என்பது குறித்து தெளிவான விளக்கத்தை பி.சி.சி.ஐ வழங்கியுள்ளது. அந்த வகையில் தற்போதைய இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் கில் மற்றும் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவருமே காயமடைந்துள்ளதால் இந்த தொடரினை தவறவிட்டுள்ளனர்.
எனவே தான் அவர்களுக்கு அடுத்து அனுபவ வீரரான கே.எல் ராகுலை கேப்டனாக நியமித்துள்ளதாகவும் அவர் இந்த தொடர் மட்டுமே இந்திய அணியின் கேப்டனாக வழிநடத்துவார் என்பதையும் குறிப்பிட்டுள்ளது. ஏனெனில் இந்திய அணி இந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு அடுத்து ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அந்த அணியை எதிர்த்து விளையாட இருக்கிறது.
இதையும் படிங்க : சஞ்சு சாம்சனுக்கு நடக்கும் இந்த ஏமாற்றம் எனக்கு வருத்தத்தை அளிக்கிறது – சுப்ரமணியம் பத்ரிநாத் பேட்டி
அதன் பின்னர் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் அடுத்த மாதம் தான் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அதற்குள் சுப்மன் கில் தயாராகி வந்து விடுவார் என்பதால் அடுத்த நியூசிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் சுப்மன் கில் மீண்டும் கேப்டனாக அணிக்கு திரும்புவார் என்பதையும் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.