இந்தியாவுக்கு பெரிய பின்னடைவா? முக்கிய தொடரிலிருந்து ஸ்ரேயாஸ், கேஎல் ராகுல் மீண்டும் விலகல் – விவரம் இதோ

KL rahul Shreyas Iyer
- Advertisement -

உலக கிரிக்கெட்டின் சாம்பியனை தீர்மானிக்கப்போகும் ஐசிசி 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக துவங்க உள்ளது. அதில் சொந்த மண்ணில் இந்த பொன்னான வாய்ப்பையாவது பயன்படுத்தி 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தொடர் தோல்விகளை இந்தியா நிறுத்துமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உச்சக்கட்டமாக காணப்படுகிறது. ஆனாலும் உலகக் கோப்பை துவங்குவதற்கு இன்னும் 100 நாட்கள் கூட இல்லாத நிலைமையில் ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய 4 முதன்மை வீரர்கள் இன்னும் காயத்திலிருந்து குணமடைந்து எந்த போட்டியிலும் விளையாடாமல் இருப்பது ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தும் ஒன்றாக இருந்து வருகிறது.

இருப்பினும் அதில் பந்து வீச்சு துறையின் முதுகெலும்பாகவும் வெற்றியை எந்த நேரத்தில் இந்தியாவின் பக்கம் திருப்பக்கூடிய துருப்பு சீட்டாகவும் போற்றப்படும் பும்ரா ஓரளவு குணமடைந்து அடுத்ததாக நடைபெறும் அயர்லாந்து டி20 தொடரில் கேப்டனாக களமிறங்குவார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது. அதே போல ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரும் மீண்டும் பயிற்சிகளை துவக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் விரைவில் குணமடைந்து வரும் செப்டம்பரில் நடைபெறும் ஆசிய கோப்பையில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்தியாவுக்கு பின்னடைவு:
அதிலும் விபத்தை சந்தித்த ரிஷப் பண்ட் 2023 உலகக் கோப்பைக்கு முன்பாக குணமடைவது கடினம் என்று எதிர்பார்க்கப்படுவதால் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக பயிற்சிகளை துவங்கியுள்ள வீடியோக்கள் நேற்று வெளியானது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி துவங்கும் ஆசிய கோப்பையில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் களமிறங்க மாட்டார்கள் என்று பிரபல க்ரிக்பஸ் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது. குறிப்பாக கடந்த 2022 டி20 உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என்பதற்காக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டி20 தொடரில் பும்ராவை அவசரமாக பிசிசிஐ களமிறக்கியது.

அதனால் முழுமையாக குணமடையாமலேயே களமிறங்கிய பும்ரா ஓரிரு போட்டிகளில் மட்டும் விளையாடி மீண்டும் காயமடைந்து வெளியேறினார். அதிலிருந்து பாடத்தை கற்றுள்ள பிசிசிஐ இந்த 2 முக்கிய வீரர்களையும் அவசரபடுத்தி ஆசிய கோப்பையில் களமிறக்காமல் அடுத்ததாக சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முழுமையாக குணமடைந்த பின் அவர்களை தேர்வு செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

- Advertisement -

இதனால் ஆசியக் கோப்பையில் இந்த 2 வீரர்கள் விளையாட மாட்டார்கள் என்பது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் 2022 காலண்டர் வருடத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் சாதனை படைத்த நிலையில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக தடுமாறினாலும் மிடில் ஆர்டரில் கடந்த ஜனவரி, பிப்ரவரியில் நடைபெற்ற இலங்கை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்களில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டு சில வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்தார்.

இருப்பினும் அவசரப்பட்டு களமிறக்க விரும்பாத பிசிசிஐ அவர்களை ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் தொடரில் தேர்ந்தெடுத்து பின்னர் உலக கோப்பையில் தேர்வு செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. அந்த சூழ்நிலையில் ஆசியக் கோப்பையில் விக்கெட் கீப்பராக சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் ஹாட்ரிக் அரை சதங்கள் அடித்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றி தொடர் நாயகன் விருது வென்று அசத்திய இஷான் கிசான் தேர்வு செய்யப்படுவார் என்றும் செய்திகள் கூறுகின்றன.

இதையும் படிங்க:2011ல ஜெய்ச்சுருக்கலாம் ஆனா இம்முறை இருப்பதிலேயே இந்தியாவுக்கு தான் வாய்ப்பு கம்மி – 2023 உ.கோ பற்றி வாசிம் அக்ரம் பேட்டி

அதிலும் இந்திய பேட்டிங் வரிசையில் இடது கை பேட்ஸ்மேன்கள் இல்லாத குறையை தீர்ப்பதற்காக ஆசியக் கோப்பையில் ரோகித் சர்மாவுடன் இஷான் கிசான் தொடக்க வீரராக களமிறங்குவதற்கான வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. அதனால் சுப்மன் கில் மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கு வாய்ப்புள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement