
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 2024 ஐபிஎல் தொடரின் போது பிளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தது. அதனைத் தொடர்ந்து இந்தாண்டு இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வலுவான கம்பேக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இந்த தொடரிலும் சென்னை மோசமான செயல்பாட்டையே வெளிப்படுத்தி வருகிறது.
அந்த வகையில் ஏற்கனவே ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் முதல் 5 போட்டிகளில் விளையாடியிருந்த சென்னை அணி நான்கு தோல்விகளை பெற்று இந்த தொடரின் ஆரம்பத்திலேயே பின்னடைவை சந்தித்தது. அதிலும் குறிப்பாக சேஸிங்கில் 180 ரன்களை கூட எட்டமுடியாமல் மோசமான தோல்விகளை சந்தித்து வருகிறது.
அதனை தொடர்ந்து ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக எஞ்சியுள்ள தொடரிலிருந்து வெளியேறியுள்ள வேளையில் நேற்று நடைபெற்ற கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின் போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மீண்டும் தோனி தலைமையிலான சி.எஸ்.கே அணி விளையாடியது.
இந்த போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சென்னை அணி 103 ரன்களை மட்டுமே குவிக்க அடுத்ததாக விளையாடிய கொல்கத்தா அணி 20 ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இதன் காரணமாக இந்த தொடரில் ஐந்தாவது தோல்வியை பதிவு செய்துள்ள சென்னை அணி தற்போது புள்ளி பட்டியலிலும் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளது.
இன்னும் இந்த தொடரில் சி.எஸ்.கே அணிக்கு 8 போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ள வேளையில் அதில் குறைந்தது 7 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்திருக்க முடியும் என்பதனால் சென்னை அணியானது தற்போது மோசமான கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் நேற்றைய தோல்விக்கு பின்னர் தங்களது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டு இருந்த சிஎஸ்கே : “இன்னும் நீண்ட தூரம் போக வேண்டியுள்ளது” என்ற ஒரு வாசகத்தை வெளியிட்டு தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தி இருந்தது.
இதையும் படிங்க : குறைந்த ரன்கள் மட்டுமில்ல.. அன்புடென்னில் ஏற்பட்ட 5 ஆவது தோல்வி – அடுக்கடுக்கான அவமானங்களை சந்தித்த சி.எஸ்.கே
இந்நிலையில் அந்த பதிவிற்கு கீழ் சென்னை அணியை வீழ்த்திய கே.கே.ஆர் அணியும் அதற்கு பதிலளித்து ஒரு ஆறுதல் கருத்தினை வெளிப்படுத்தி உள்ளது. அந்த வகையில் கே.கே.ஆர் பதிவிட்டுள்ள அந்த கருத்தில் “சிஎஸ்கே ஒரு சாம்பியன் அணி”, “நீங்கள் மீண்டும் வலுவாக வருவீர்கள்” என அவர்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் தங்களது பதிவினை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.