வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான டுவைன் பிராவோ கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருந்தாலும் தொடர்ந்து உலகமெங்கும் நடைபெற்று வந்த டி20 தொடர்களில் முக்கிய வீரராக பங்கேற்று விளையாடி வந்தார். அதோடு ஐபிஎல் தொடரிலும் சென்னை அணியின் பந்துவீச்சு ஆலோசகராக செயல்பட்டு வந்தார். இந்நிலையில் அண்மையில் நடைபெற்று முடிந்த கரிபியன் லீக் தொடருக்கு பிறகு தற்போது அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
கொல்கத்தா அணியின் நிர்வாகம் வழங்கிய சலுகை :
தற்போது 40 வயதை எட்டியுள்ள பிராவோ இனி எவ்வித போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்பதனால் அவரது ரசிகர்களுக்கு இந்த ஓய்வு முடிவு ஏமாற்றத்தை அளித்துள்ளது. அவர் ஓய்வு முடிவை அறிவித்த சில நிமிடங்களிலேயே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் மென்டராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல் தொடரை பொறுத்த வரை கடந்த பல ஆண்டுகளாக சென்னை அணியின் விசுவாசியாக இருந்த பிராவோ தற்போது சென்னை அணியின் பந்துவீச்சு ஆலோசகர் பதவியில் இருந்து வெளியேறி கொல்கத்தா அணியின் மென்டராக மாறியுள்ளார்.
இப்படி நடைபெற்றுள்ள அணி மாற்றம் பலரது மத்தியிலும் கேள்வியை எழுப்பி உள்ளது. மேலும் சென்னை அணியிலிருந்து அவர் விலக யார் காரணம்? என்பது குறித்தும் கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் பிராவோ இந்த முடிவை எடுக்க முக்கிய காரணமே கொல்கத்தா அணியின் நிர்வாகம் வழங்கிய அசத்தலான சலுகைதானாம். அதன் காரணமாக கோடிக்கணக்கில் சம்பாதிக்க இருப்பதாலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.
ஏனெனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது ஐபிஎல் தொடரில் மட்டுமில்லாமல் தங்கள் வசம் இருக்கும் நான்கு அணிகளின் ஆலோசகர் பதவியையும் அவருக்கு வழங்கி உள்ளதாம். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது கரீபியன் பிரிமியர் லீக்கில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியை தங்கள் வசம் வைத்துள்ளது.
அதேபோன்று அமெரிக்காவில் நடைபெறும் எம்எல்சி தொடரில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணியை தங்கள் வசம் வைத்துள்ளது. மேலும் ஐக்கிய அரபு டி20 தொடரான இன்டர்நேஷனல் டி20 தொடரிலும் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியை வைத்துள்ளது. இப்படி நான்கு அணிகளுக்கும் சேர்த்து ஆலோசகர் பதவியை வழங்கியதாலே பிராவோ அந்த அணியின் நிர்வாகத்தின் அந்த அழைப்பை ஏற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : பெர்த் வெற்றி நமக்கே.. அந்த 2 இந்திய வீரர்களை சைலன்ட்டா வெச்சா 3 – 1ன்னு ஆஸி ஜெய்க்கலாம்.. டேரன் லேமன்
சென்னை அணியில் இருந்தால் அந்த அணியின் ஆலோசகராக மட்டுமே இருக்க முடியும். ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இந்த சலுகையை பிராவோ ஏற்றுக் கொண்டதால் நான்கு அணிகளுக்குமே அவர் ஆலோசகராக செயல்பட இருக்கிறார். இதன் மூலம் ஆண்டு முழுவதும் வேலை நிரந்தரம் என்பது மட்டுமின்றி கோடிக்கணக்கில் பணமும் கிடைக்கும் என்பதனாலே பிராவோ சென்னை அணியை விட்டு கொல்கத்தா அணிக்கு நகர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.