பார்டர் – கவாஸ்கர் கோப்பை 2024 டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்காக இப்போதே எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் வரும் நவம்பர் மாதம் துவங்கும் அந்தத் தொடர் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெற உள்ளது. அதில் ஆஸ்திரேலியாவை அதனுடைய சொந்த மண்ணில் தொடர்ந்து 3வது முறையாக வீழ்த்தி இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பெறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
ஏனெனில் கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 தொடர்களையும் வென்று இந்தியா வரலாற்றுச் சாதனை படைத்தது. மறுபுறம் சொந்த மண்ணில் வலுவான ஆஸ்திரேலியா முதல் முறையாக இந்தியாவிடம் அவமானத் தோல்விகளை சந்தித்தது. அத்துடன் 2014க்குப்பின் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் ஆஸ்திரேலியா தோற்றுள்ளது.
டேரன் லீமன் கணிப்பு:
எனவே எப்படியாவது இம்முறை இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்ற லட்சியத்துடன் ஆஸ்திரேலியா இப்போதே தயாராகி வருகிறது. சொல்லப்போனால் இம்முறை ரிஷப் பண்ட்டை அமைதியாக வைத்து வெற்றி பெற திட்டங்களை வகுத்து வருவதாக கேப்டன் பட் கமின்ஸ், நேதன் லயன் ஆகியோர் சமீபத்தில் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இம்முறை பவுன்ஸ், வேகத்துக்கு சாதகமான பெர்த் மைதானத்தில் முதல் போட்டி நடைபெறுவதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டேரன் லேமன் கூறியுள்ளார்.
எனவே அங்கே இந்தியாவை தோற்கடித்து ஆஸ்திரேலியா வெல்வது உறுதி என்று அவர் தெரிவித்துள்ளார். அதன் பின்பும் சொந்த மண்ணில் நிலவும் சூழ்நிலைகளைப் பயன்படுத்தி இந்தியாவை 3 – 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்லும் என்று லேமன் அதிரடியான கணிப்பை வெளியிட்டுள்ளார். அதற்கு விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை ஆஸ்திரேலியா அமைதியாக வைத்திருப்பது அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.
விராட், ரோஹித் முக்கியம்:
இது பற்றி ட்விட்டரில் டேரன் லேமன் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ஆஸ்திரேலியா – இந்தியா தொடருக்கான கணிப்பு. 3 – 1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வெல்லும். பவுன்ஸ்க்கு சாதகமான பெர்த் மைதானத்தில் வெற்றியுடன் நாம் கோடைகாலத்தை துவங்குவோம். பின்னர் அந்த வெற்றியால் சொந்த மண் அணி தங்களுடைய பழக்கமான சூழ்நிலைகளில் சிறப்பாக விளையாடும்”
இதையும் படிங்க: பும்ரா, ஷமி கிடையாது.. அந்த 2 இந்திய பவுலர்களை சமாளிச்சுட்டா ஆஸ்திரேலியா ஜெய்க்கும்.. மேக்ஸ்வெல் பேட்டி
“அதே சமயம் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரை கோடைகாலம் முழுவதும் அமைதியாக வைத்திருப்பது அவசியம்” என்று கூறினார். இதே போல இம்முறை ஆஸ்திரேலியா 3 – 1 என்ற கணக்கில் வெல்லும் என்று ரிக்கி பாண்டிங் சமீபத்தில் கணத்திருந்தார். மேலும் சரியான ஸ்கோர் சொல்ல முடியாவிட்டாலும் இம்முறை இந்திய அணியை ஆஸ்திரேலியா வீழ்த்தும் என்று ஆடம் கில்கிறிஸ்ட்டும் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



