தாகூர் மேஜிக், நரேன் – சக்ரவர்த்தி மயஜாலம், மீண்டும் வேலையை ஆரம்பித்த ஆர்சிபி – கேகேஆர் வென்றது எப்படி

RCB vs KKR
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 தொடரில் ஏப்ரல் 6ஆம் தேதியன்று உலகப் புகழ் பெற்ற கொல்கத்தா ஈட்ன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற 9வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தாவுக்கு தடுமாறிய வெங்கடேஷ் ஐயரை 3 (7) ரன்களில் காலி செய்த டேவிட் வில்லி அடுத்து வந்த மந்திப் சிங்கை கோல்டன் டக் அவுட்டாக்கி மிரட்டினார். போதாக்குறைக்கு அடுத்து வந்த கேப்டன் நித்திஷ் ராணாவும் 1 (5) ரன்னில் நடையை கட்டியதால் 47/3 என ஆரம்பத்திலேயே கொல்கத்தா திணறியது.

இருப்பினும் மறுபுறம் நிலைத்து நின்ற மற்றொரு தொடக்க வீரர் ரஹ்மத்துல்லா குர்பாஸ் அடுத்து வந்த ரிங் சிங்குடன் இணைந்து 4வது கிரிக்கெட்டுக்கு 42 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு காப்பாற்றிய போது 6 பவுண்டரி 3 சிக்சருடன் 57 (44) ரன்களில் அவுட்டானார். அந்த நிலைமையில் களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் ஆண்ட்ரே ரசல் கொஞ்சமும் பொறுப்பின்றி அதிரடியாக விளையாட முயற்சித்து கோல்டன் டக் அவுட்டானதால் மீண்டும் 89/5 என திணறிய கொல்கத்தா 150 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

கொல்கத்தாவின் மேஜிக்:
ஆனால் அடுத்து வந்த ஷார்துல் தாக்கூர் களமிறங்கியது முதலே டேவிட் வில்லி உள்ளிட்ட பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டு வெறும் 20 பந்துகளில் அரை சதமடித்து இந்த சீசனில் அதிவேகமாக அரை சதமடித்த வீரர் என்ற ஜோஸ் பட்லரின் சாதனையை சமன் செய்து மிரட்டினார். அவருடன் ஜோடி சேர்ந்து தனது பங்கிற்கு சிறப்பாக செயல்பட்ட ரிங்கு சிங் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 6வது விக்கெட்டுக்கு 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 2 பவுண்டரி 2 சிக்சருடன் 46 (33) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுபுறம் பெங்களூருவுக்கு சிம்ம சொப்பனமாக மாறிய தாக்கூர் 9 பவுண்டரி 2 சிக்சருடன் தனது முதல் ஐபிஎல் அரை சதத்தை அடித்து 68 (29) ரன்கள் குவித்து கடைசி ஓவரில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் உமேஷ் யாதவ் 6* (2) எடுத்ததால் மாஸ் காட்டிய கொல்கத்தா 20 ஓவர்களில் 204/7 ரன்கள் எடுத்தது. ஆனால் கடைசி 8 ஓவர்களில் சொதப்பிய பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக டேவிட் வில்லி மற்றும் கரண் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட் சாய்த்தனர். அதைத் தொடர்ந்து 205 என்ற கடினமான இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு 44 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்த விராட் கோலியை 3 பவுண்டரியுடன் 21 (18) ரன்களில் சுனில் நரேன் கிளீன் போல்டாக்க மறுபுறம் 2 பவுண்டரி 2 சிக்ஸரை தெறிக்க விட்டு அச்சுறுத்தலை கொடுத்த கேப்டன் டு பிளேஸிஸை தமிழக வீரர் வரும் சக்கரவர்த்தி தனது மாயாஜாலத்தால் 23 (12) ரன்களில் போல்ட்டாக்கினார்.

- Advertisement -

அத்துடன் க்ளென் மேக்ஸ்வெல் 5 (7), ஹர்ஷல் படேல் 0 (2) என அடுத்து வந்த வீரர்களையும் கிளீன் போல்டாக்கிய அவர் பெங்களூருவின் கதையை பாதி முடித்தார். அதனால் 54/4 என திணறிய பெங்களூருவை காப்பாற்றுவார்கள் என்று கருதப்பட்ட தினேஷ் கார்த்திக் 9 (8), சபாஷ் அகமது 1 (5), அனுஜ் ராவத் 1 (5) என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி கைவிட்டார்கள்.

இறுதியில் மைக்கேல் பிரேஸ்வெல் 19 (18), டேவிட் வில்லி 20* (20), ஆகாஷ் தீப் 17 (8) என அடுத்து வந்த வீரர்கள் போராடி குறைவான ரன்களில் ஆட்டமிழந்தனர். அதனால் 18.4 ஓவரில் 123 ரன்களுக்கு பெங்களூருவை சுருட்டி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக வருண் சக்கரவர்த்தி 4 விக்கெட்களும் சுயஷ் சர்மா 3 விக்கட்டுகளும் சுனில் நரேன் 2 விக்கெட்டுகளும் சாய்த்தனார். பொதுவாகவே முக்கிய நேரத்தில் சொதப்பலாக செயல்பட்டு வெற்றியை கோட்டை விடுவதற்கு பெயர் போன பெங்களூரு இந்த போட்டியிலும் பந்து வீச்சில் 12 ஓவர்கள் வரை அசத்தலாக செயல்பட்டது.

இதையும் படிங்க: ஐ.சி.சி தரவரிசை விராட் கோலி, ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளிய சுப்மன் கில் அசத்தல் – விவரம் இதோ

ஆனால் கடைசி 8 ஓவர்களில் சொதப்பி லார்ட் தாகூரிடம் சரமாரியாக அடிவாங்கிய அந்த அணி மனதளவில் அப்போதே உடைந்து பேட்டிங்கில் அதிரடியை விட்டால் 205 ரன்களை சேசிங் செய்ய முடியாது என்ற எண்ணத்துடன் கொஞ்சமும் நிதானத்தை வெளிப்படுத்தாமல் பதற்றமடைந்து வருண் சக்கரவர்த்தி – சுனில் நரேன் ஆகியோரது மாயாஜால சுழலில் சிக்கி வீழ்ந்தது. அதனால் பெங்களூரு மீண்டும் உண்மையான ஃபார்முக்கு திரும்பி வேலையை காட்ட ஆரம்பித்து விட்டதாக ரசிகர்கள் கலாய்க்கிறார்கள்.

Advertisement