வீடியோ : பரபரப்பான கடைசி பந்தில் பஞ்சாப்பை மாஸாக வீழ்த்திய ரிங்கு சிங் – ஆர்சிபி, மும்பையை மிஞ்சிய கொல்கத்தா

- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 8ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெற்ற 53வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர்கொண்டது. அதில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு பிரப்சிம்ரன் சிங் 12 (8) ரன்களில் அவுட்டாகி ஏமாற்ற அடுத்து வந்த பனுக்கா ராஜபக்சா டக் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தார். அடுத்த சில ஓவர்களிலேயே அடுத்து வந்த லியாம் லிவிங்ஸ்டன் 15 (9) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் 53/3 என ஆரம்பத்திலேயே பஞ்சாப் தடுமாறியது.

அந்த நிலைமையில் களமிறங்கிய ஜிதேஷ் சர்மா மறுபுறம் நங்கூரமாக விளையாடிய கேப்டன் சிகர் தவானுடன் இணைந்து 4வது விக்கெட்டுக்கு 53 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்த போதிலும் 2 சிக்ஸருடன் 23 (18) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே மிகவும் நிதானமாக விளையாடிய சிகர் தவான் 9 பவுண்டரி 1 சிக்சருடன் 57 (47) ரன்கள் குவித்து அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இறுதியில் சாம் கரண் 4 (9) ரன்களும் ரிஷி தவான் 19 (11) ரன்களும் எடுத்து அவுட்டாக கடைசி நேரத்தில் தமிழக வீரர் சாருக்கான் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 21* (8) ரன்களும் ஹர்ப்ரீத் ப்ரார் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 17* (9) ரன்களும் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்தனர்.

- Advertisement -

த்ரில் வெற்றி:
அதனால் தப்பிய பஞ்சாப் 20 ஓவர்களில் 179/7 ரன்கள் எடுக்க கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 180 ரன்களை துரத்திய கொல்கத்தாவுக்கு ரஹ்மத்துல்லா குர்பாஸ் 15 (12) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிரடியாக விளையாட முயற்சித்த மற்றொரு தொடக்க வீரர் ரேசன் ராய் 8 (24) பவுண்டரிகளுடன் 38 (24) ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த நிலைமையில் களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் கேப்டன் நிதிஷ் ராணாவுடன் இணைந்து 3வது விக்கெட் 51 ரன்கள் பார்ட்னர்சிப் அமைத்த போதிலும் கடைசி வரை தடவலாகவே செயல்பட்டு 11 (13) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார்.

அவருடன் சற்று அதிரடியாக விளையாடிய கேப்டன் நிதிஷ் ராணா 6 பவுண்டரி 1 சிக்சருடன் 51 (38) ரன்களில் முக்கிய நேரத்தில் ஆட்டமிழந்ததால் போட்டியில் அழுத்தம் ஏற்பட்டது. ஆனால் அடுத்து வந்த நம்பிக்கை நட்சத்திரம் ஆண்ட்ரே ரசல் தனது பாணியில் அதிரடியாக விளையாடி 3 பவுண்டரி 3 சிக்சரை பறக்கவிட்டு கொல்கத்தாவை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார். குறிப்பாக கடைசி ஓவரில் வெறும் 6 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்ட போது அவரும் ரிங்கு சிங்கும் மாறி மாறி சிங்கிள் எடுத்த போது 5வது அரஷ்தீப் சிங் ரன் அவுட் செய்ததால் போட்டியில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டது.

- Advertisement -

அந்த பரபரப்பில் கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது அரஷ்தீப் வீசிய ஃபுல் டாஸ் பந்தை லெக் சைட் திசையில் பவுண்டரியாக பறக்க விட்ட ரிங்கு சிங் 2 பவுண்டரி 1 சிக்ஸருடன் 21* (10) ரன்கள் விளாசி அபாரமான ஃபினிஷிங் கொடுத்து வெற்றி பெற வைத்தார். அதனால் 20 ஓவர்களில் 182/5 ரன்கள் எடுத்த கொல்கத்தா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதால் பஞ்சாப் சார்பாக அதிகபட்சமாக ராகுல் சஹர் 2 விக்கெட்களை எடுத்த போராட்டம் வீணானது.

குறிப்பாக 200 ரன்கள் எடுத்தால் கூட எளிதாக சேசிங் செய்து விடக்கூடிய பேட்டிங்கு சாதகமான ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தடுமாற்றமாகவே செயல்பட்ட பஞ்சாப் வெற்றிக்கு போராடுவதற்கு 20 ரன்களை குறைவாகவே எடுத்தது. அதே போல பந்து வீச்சில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டும் டெத் ஓவர்களில் ரசல் அதிரடியால் ரன்களை வாரி வழங்கிய அந்த அணியை கடைசி நேரத்தில் ரிங்கு சிங் பவுண்டரியுடன் பினிஷிங் செய்து தோற்கடித்தார்.

அதிலும் குறிப்பாக குஜராத்துக்கு எதிராக கடைசி ஓவரில் 5 சிக்சர்கள் தேவைப்பட்ட போது யாருமே நினைத்துப் பார்க்காத வெற்றியை பெற்றுக் கொடுத்த அவர் இதெல்லாம் எனக்கு ஈஸி என்பது போல் சிறப்பாக பேட்டிங் செய்து வெற்றி பெற வைத்தார். அதனால் 11 போட்டிகளில் 5வது வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா புள்ளி பட்டியலில் ரன் ரேட் அடிப்படையில் பெங்களூரு, பஞ்சாப், மும்பை ஆகிய அணிகளை பின்னுக்கு தள்ளி 5வது இடத்திற்கு முன்னேறியது.

Advertisement