
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எம்எஸ் தோனி வரலாற்றின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுகிறார். உலகிலேயே 3 வகையான ஐசிசி வெள்ளைப்பந்து கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக அவர் சாதனை படைத்துள்ளார். அவரது தலைமையில் இந்தியா 2010இல் முதல் முறையாக நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக முன்னேறி சாதனை படைத்தது.
அத்துடன் ஐபிஎல் தொடரில் 5 கோப்பைகளை சிஎஸ்கே அணிக்காக வென்றுள்ள தோனி வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார். 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் வென்றுள்ள அவர் பல இளைஞர்களுக்கு ரோல் மாடலாக தெரிகிறார். முன்னதாக ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே – மும்பை அணிகள் தலா 5 கோப்பைகளை வென்று சாதனை படைத்துள்ளன.
குறிப்பாக ரோஹித் சர்மா தலைமையில் மும்பை 5 கோப்பைகளை வென்று சாதனை படைப்பதற்கு கைரன் பொல்லார்ட் முக்கிய பங்காற்றினார் என்பதை யாராலும் மறுக்க முடியாது. மற்ற அணிகளைக் காட்டிலும் சென்னைக்கு எதிராக தோற்க வேண்டிய நிறைய போட்டிகளில் அவர் தனியாளாக மும்பையை வெற்றி பெற வைத்துள்ளார் என்றே சொல்லலாம். இந்நிலையில் எம்எஸ் தோனி வரலாற்றின் ஆல் டைம் சிறந்த கேப்டன் என்று பொல்லார்ட் பாராட்டியுள்ளார்.
இது பற்றி சமீபத்திய பேட்டியில் கிரிக்கெட்டின் சிறந்த கேப்டன் யார்? என்று அவரிடம் தொகுப்பாளர் கேட்டார். அதற்கு பொல்லார்ட் தெரிவித்த பதில் பின்வருமாறு. “எம்எஸ் தோனி ஆல் டைம் கிரேட்டஸ்ட் கேப்டன். அவருடன் நான் எப்போதும் ஒரே அணியில் விளையாடியதில்லை. ஆனால் களத்தில் அவருடைய தந்திரோபாயங்களை நான் நேரடியாக பார்த்துள்ளேன். அந்த தோனியை நான் ரசித்துள்ளேன்” என்று கூறினார்.
எடுத்துக்காட்டாக 2010 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் கடைசி நேரத்தில் சிஎஸ்கே அணியை அடித்து நொறுக்கிய பொல்லார்ட் மும்பையை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார். ஆனால் அப்போது அவர் நேராக பவுண்டரி அடிப்பார் என்பதைக் கணித்த தோனி அங்கே மேத்தியூ ஹைடனை நிறுத்தினார். ஆச்சரியப்படும் வகையில் அடுத்த சில பந்துகளில் பொல்லார்ட் அவரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறியதால் சிஎஸ்கே முதல் கோப்பையை வென்றது.
இதையும் படிங்க: உலகின் நம்பர் ஒன் பவுலராக முன்னேறிய வருண்.. ஆல் டைம் டாப் பவுலராகவும் உலக சாதனை
அதனால் ஓய்வுக்கு பின் தோனி ஃபீல்டிங் பற்றி புத்தகம் எழுத வேண்டுமென அவரை வளர்த்த சௌரவ் கங்குலி ஒருமுறை தெரிவித்திருந்தார். அந்த வகையில் எதிரணி பேட்ஸ்மேன்களின் செயல்பாடுகளைக் கணித்து அதற்கு தகுந்தாற்போல் நகர்வுகளை செய்து வெற்றி பெறுவதில் தோனி வல்லவராக அறியப்படுகிறார். தற்போது 38 வயதாகும் பொல்லார்ட் ஐபிஎல் தொடரில் ஓய்வு பெற்று விட்ட நிலையில் தோனி 45 வயதிலும் விளையாடுவது குறிப்பிடத்தக்கது.