8 பந்தில் 7 சிக்ஸ்.. 38 வயதிலும் மாறாத காட்டடி.. ஹேல்ஸை முந்தி 2வது சாதனை.. கரீபியனில் தெறிக்க விட்ட பொல்லார்ட்

Kieron Pollard
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் கரீபியன் பிரீமியர் லீக் 2025 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அந்தத் தொடரில் செப்டம்பர் ஒன்றாம் தேதி ட்ரினிடாட் நகரில் 19வது போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் செயின்ட் கிட்ஸ் நேவிஸ் பேட்ரியாட்ஸ் – ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற செயின்ட் கிட்ஸ் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய ட்ரின்பாகோ அணிக்கு அலெக்ஸ் ஹேல்ஸ் 7, கோலின் முன்ரோ 17, ப்ராவோ 21 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தானர். மிடில் ஆடரில் ஜோடி சேர்ந்த கேப்டன் நிக்கோலஸ் பூரான் மற்றும் கைரன் பொல்லார்ட் ஆகியோர் அதிரடியாக விளையாடினார்கள். அதில் நிக்கோலஸ் பூரான் கொஞ்சம் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

8 பந்தில் 7 சிக்ஸ்:

ஆனால் மறுபுறம் பொல்லார்ட் தம்முடைய ஸ்டைலில் முரட்டுத்தனமாக அடித்து நொறுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குறிப்பாக நவியன் படாய்சீ வீசிய 15வது ஓவரின் முதல் பந்தில் பூரான் சிங்கிள் எடுத்தார். அடுத்த பந்தில் ரன் எடுக்காத பொல்லார்ட் 3, 4வது பந்துகளில் அடுத்தடுத்த சிக்ஸர்களை பரக்க விட்டார். 5வது பந்தில் ரன் எடுக்காத அவர் கடைசி பந்தில் சிக்ஸர் பறக்க விட்டு அசத்தினார்.

அடுத்ததாக வக்கார் சலாம்கெய்ல் வீசிய 16வது ஓவரின் முதல் பந்தில் ரன் எடுக்காத பூரான் 2வது பந்தில் சிங்கள் எடுத்தார். 3வது பந்தை எதிர்கொண்ட பொல்லார்ட் சிக்சர் பறக்க விட்டார். அதோடு நிற்காத அவர் அதற்கடுத்த 3 பந்துகளிலும் 3 முரட்டுத்தனமான ஹாட்ரிக் சிக்ஸர்களை தெறிக்க விட்டார். அந்த வகையில் 6, 6, 0, 6, 6, 6, 6, 6 என 8 பந்துகளில் 7 சிக்ஸர்கள் அடித்த அவர் தொடர்ந்து அதிரடியாக விளையாடி 65 (29) ரன்களை 224.14 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து அவுட்டானார்.

- Advertisement -

மாறாத காட்டடி:

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்து சாதனைப் படைத்துள்ள பொல்லார்ட் ஐபிஎல் தொடரில் மும்பை அணி கோப்பைகளை வெல்ல முக்கிய பங்காற்றினார். தற்போது 38 வயதிலும் தம்முடைய முரட்டுத்தனமான பேட்டிங் ஸ்டைல் மாறவில்லை என்பதை நிரூபித்த அவர் அலெக்ஸ் ஹேல்ஸை (14031) முந்தி டி20 கிரிக்கெட்டில் 2வது அதிக ரன்கள் (14070) அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். அவருடன் சேர்ந்து விளையாடிய பூரான் 52 (38) ரன்கள் எடுத்தார். இறுதியில் ஆண்ட்ரே ரசல் 10* (5) ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் ட்ரின்பாகோ 179/6 ரன்களை எடுத்தது.

இதையும் படிங்க: டி20 கிரிக்கெட்டில் 35 வயதிலேயே ஓய்வு பெற்ற ஆஸியின் சாதனை நாயகன் ஸ்டார்க்.. உ.கோ, இந்திய தொடருக்காக தியாகம்

செய்ன்ட் கிட்ஸ் அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ஜேசன் ஹோல்டர் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து விளையாடிய செயின்ட் கிட்ஸ் முடிந்தளவு போராடியும் 20 ஓவரில் 167/6 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது. அதிகபட்சமாக எவின் லெவிஸ் 42, ஆண்ட்ரே பிளக்ஸர் 67 ரன்கள் எடுத்தனர். 12 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ட்ரின்பாகோ அணிக்கு அதிகபட்சமாக நாதன் எட்வர்ட்ஸ் 3 விக்கெட்டுகள் எடுத்தார்.

Advertisement