
இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு தற்போது உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கின்றன. ஏனெனில் ஏற்கனவே இரண்டு முறை ஆஸ்திரேலிய மண்ணில் அடுத்தடுத்து டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் இம்முறையும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி காத்திருக்கிறது. அதேவேளையில் சொந்த மண்ணில் மீண்டும் இந்திய அணியை வீழ்த்தி பதிலடி கொடுக்கும் வகையில் ஆஸ்திரேலியா அணியும் தயாராகி வருகிறது.
இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த டெஸ்ட் தொடரானது தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் இந்த தொடர் குறித்து தினமும் ஒரு செய்தி வெளியாகி வரும் வேளையில் இந்த இந்திய அணிக்கு எதிரான இந்த தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர துவக்க வீரரான உஸ்மான் கவாஜாவும் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி எப்பொழுதுமே மிக சுவாரசியமாக நடைபெறும். இம்முறை இந்திய அணிக்கு எதிராக நிச்சயம் நாங்கள் ஆதிக்கம் செலுத்தி விளையாட விரும்புகிறோம். அதோடு இம்முறை இந்திய அணியை வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்ற விரும்புகிறோம்.
இந்திய அணியில் அஸ்வின் ஒரு மிகச்சிறந்த பந்துவீச்சாளர். அவர் எப்பொழுதுமே ஒரு வியூகத்துடன் இருக்கும் திறன் உடையவர். எல்லா போட்டியிலும் ஒவ்வொரு திட்டத்துடன் அவர் களத்திற்கு வருவார். மேலும் அந்த போட்டியில் எவ்வாறு எதிரணி வீரர்கள் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதை கண்டுபிடித்து செயல்படுவார். அவருடைய கிரிக்கெட் மூளையை நான் மிகவும் மதிக்கிறேன்.
இதையும் படிங்க : இன்னும் 14 விக்கெட் தான் ஆஸ்திரேலிய வீரர் நாதன் லயனை பின்னுக்கு தள்ள காத்திருக்கும் தமிழக வீரர் அஷ்வின்
அவருக்கு எதிராக எப்பொழுது விளையாடினாலும் அது அருமையாக இருக்கும். அந்த சவாலுக்காக நான் காத்திருக்கிறேன் என்று உஸ்மான் கவாஜா கூறியுள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடர்பானது நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.