ஐபிஎல் தொடர் வெற்றிகரமான 15 வருடங்களை கடந்து இந்த வருடம் 16வது முறையாக வரும் மார்ச் 31 முதல் கோலாகலமாக துவங்குகிறது. இந்த தொடரில் கோப்பையை வெல்வதற்கு களமிறங்கும் 10 அணிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்டு மீண்டும் இந்தியாவுக்காக விளையாடும் நிறைய கிரிக்கெட் வீரர்களுக்கு மத்தியில் கலீல் அஹ்மது ஒருவராக திகழ்கிறார். ராஜஸ்தானை சேர்ந்த இவர் கடந்த 2016 முதல் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக விளையாட துவங்கினார். குறிப்பாக இடது கை வேகப்பந்து வீச்சாளரான அவர் முன்னாள் இந்திய ஜாம்பவான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜஹீர் கான் பயிற்சியில் முன்னேற்றங்களை சந்தித்து நாளடைவில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் 2018 ஆசிய கோப்பையில் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டிலும் அறிமுகமானார்.
ஆனால் ஜாஹீர் கானுக்கு பின் இப்போதும் தரமான இடது கை வேகப்பந்து வீச்சாளர் இல்லாமல் திணறும் இந்தியாவின் தேடலுக்கு ஒரு தீர்வாக கிடைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் ஒரு வருடத்திற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் 16 ஒருநாள் மற்றும் 14 டி20 போட்டிகளுடன் சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்திய அணியிலிருந்து வெளியேறினார். குறிப்பாக கடைசியாக கடந்த 2019ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டி20 தொடரில் 2 போட்டிகளில் வாய்ப்பு பெற்ற அவர் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டும் எடுத்து 81 ரன்களை வாரி வழங்கினார்.
ஸ்ரீகாந்த்க்கு பதிலடி:
அதனால் கிண்டல்களுக்கு உள்ளான அவரை முன்னாள் இந்திய வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சித்தது பின்வருமாறு. “வெளிப்படையாக சொல்ல வேண்டுமெனில் கலீல் அகமது இந்த லெவலுக்கு பொருத்தமற்றதாக இருக்கிறார். அவர் முன்னேற்றத்திற்கான வாய்ப்பு எப்போதும் உள்ளது. ஆனால் அவர் அதில் முன்னேறுவதற்கு வேகமாக கற்றுக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் 2019இல் இந்தியாவுக்காக விளையாடியதை விட தற்போது நிறைய முன்னேற்றங்களை கண்டு 10 மடங்கு சிறந்த பவுலராக தாம் முன்னேறியுள்ளதாக கலீல் அஹமது கூறியுள்ளார்.
எனவே ஸ்ரீகாந்த் போன்ற முன்னாள் வீரர்கள் தம் மீது வைக்கும் விமர்சனங்களை நேர்மறையான முறையில் எடுத்துக்கொண்டு சிரித்து விட்டு முன்னேறுவதில் மட்டும் கவனம் செலுத்துவதாக கூறியுள்ளார். இது பற்றி ஜியோ சினிமா சேனலில் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவுடன் நிகழ்த்திய உரையாடலில் அவர் பேசியது பின்வருமாறு. “ஆம் அந்த விமர்சனங்களை ஏதோ ஒரு ஊடகத்தில் நான் பார்த்தேன். நிச்சயமாக அது எனக்கு வலியை கொடுத்தது. அப்போது நானும் இந்தியாவுக்காக விளையாடும் ஒரு வீரர் என்று நினைத்தேன். அந்த சமயத்தில் மிகவும் இளமையாக இருந்ததால் அதிக உணர்ச்சிக்குள்ளானேன்”
“அதை வைத்து நான் எப்படி முன்னேற முடியும் என்று நினைத்தேன். இருப்பினும் இப்போதெல்லாம் அது போன்ற விமர்சனங்கள் எனக்கு பெரிதாக தோன்றுவதில்லை. மாறாக முன்னேறுவதற்கு தேவையான செயல்பாடுகளை கற்றுக்கொண்டு அதில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என்பதே முக்கியமாகும். தற்போதயெல்லாம் நான் ஆரோக்கியமான டயட் மற்றும் பயிற்சிகளில் கவனம் செலுத்துகிறேன். அதே சமயம் என்னைப் பற்றி யார் என்ன சொல்கிறார்கள் என்பதை கவனித்தாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை”
“என் மீது வைக்கப்படும் நல்ல விமர்சனங்களை பார்த்து நான் சிரிப்பேன். மோசமான விமர்சனங்களுக்கும் அதே பதில் தான். மேலும் இந்தியாவுக்காக விளையாடிய போது நான் அந்தளவுக்கு நல்ல பவுலராக இல்லை. இருப்பினும் தற்போது நான் நன்கு முன்னேறிய பவுலராக இருப்பதாக நம்புகிறேன். ஆனால் இப்போது நான் இந்திய அணியில் இல்லை. குறிப்பாக இந்தியாவுக்காக விளையாடியதை விட தற்போது நான் 10 மடங்கு முன்னேறிய அனுபவமிக்க பவுலராக இருக்கிறேன். என்னால் இப்போது போட்டியை பற்றியும் பேட்ஸ்மேன்கள் என்ன நினைப்பார்கள் என்பதை பற்றி படிக்க முடிகிறது” என்று கூறினார்.
இதையும் படிங்க:IPL 2023 : ஒரு காலத்துல எப்டி இருந்த மனுஷன் – ஐபிஎல் தொடரில் வித்யாசமாக களமிறங்கும் ஸ்டீவ் ஸ்மித், ரசிகர்கள் ஆதங்கம்
அப்படி கடைசியாக 2019இல் விமர்சனங்களை சந்தித்து வெளியேறிய கலீல் அகமத் மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவதற்காக இந்த ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்த காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.