
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 36 வயதில் விளையாடி வருகிறார். 2008 அண்டர்-19 உலகக் கோப்பையை கேப்டனாக வென்று சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் கடந்த 15 வருடங்களாக இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையில் தடுமாறிய அவர் முக்கியமான ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்று இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார்.
அத்துடன் ஓய்வு பெற்ற அவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடி வருகிறார். அந்த வாய்ப்பில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்களில் மிகவும் சுமாராக விளையாடிய விராட் கோலி இந்தியா டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு தகுதி பெறாமல் முதல் முறையாக வெளியேற ஒரு காரணமாக அமைந்தார். அதனால் அவரை ஓய்வு பெறுமாறு ஒரு தரப்பு ரசிகர்கள் விமர்சித்தார்கள்.
அந்த விமர்சனத்திற்கு மத்தியில் ரஞ்சிக் கோப்பையில் 12 வருடங்கள் கழித்து விளையாடிய விராட் கோலி அரை சதத்தை கூட அடிக்காமல் ஏமாற்றத்தையே கொடுத்தார். அடுத்ததாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர் விளையாட உள்ளார். அதற்கு முன்பாக நடைபெற்ற இங்கிலாந்து தொடரில் அரை சதமடித்த அவர் சாம்பியன்ஸ் தொடரில் அசத்தும் முனைப்புடன் களமிறங்க உள்ளார்.
இந்நிலையில் விராட் கோலி போன்ற தரமான வீரர் இதற்கு முன் முடிந்து விட்டதாக எழுதப்பட்ட போதெல்லாம் சிறப்பாக விளையாடியதாக கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். எனவே இப்போதும் முடிந்ததாக எழுத வேண்டாம் என்று விமர்சகர்களைக் கேட்டுக் கொள்ளும் அவர் ஓய்வு பெறுவது விராட் கோலி சொந்த முடிவு என்று ஆதரவும் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“விராட் கோலி இந்த விளையாட்டின் ஒரு சிறந்த வீரர். பல தருணங்களில் பல மக்கள் அவரை முடிந்ததாக எழுதினார்கள். உண்மையில் அவரைப் போன்ற வீரர் முடிந்ததாக உங்களால் எப்போதும் எழுத முடியாது. ஏனெனில் அவரைப் போன்ற பேட்ஸ்மேன் களமிறங்கும் போது ஒளி இருக்கிறது. எனவே அந்தக் கேள்வி விராட் கோலியிடம் தான் செல்ல வேண்டும்”
இதையும் படிங்க: 243 ரன்ஸ்.. முத்தரப்பு கோப்பையை முத்தமிட்ட நியூஸிலாந்து.. சொந்த மண்ணில் பாகிஸ்தானுக்கு நேர்ந்த பரிதாபம்
“ஓய்வு பற்றிய கேள்வி என்னிடம், தேர்வாளர்கள் போன்ற மற்றவர்களிடம் கேட்கக் கூடாது. எவ்வளவு நாட்கள் விளையாட முடியும், எவ்வளவு காலங்கள் போராட முடியும் என்பதை அறிந்த அவரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். அனைவரும் எப்போதும் பெரிய அளவில் எதிர்பார்க்கும் அளவுக்கு விராட் கோலி தனக்கென்று உயர்தரத்தை உருவாக்கி வைத்துள்ளார்” என்று கூறினார்.