
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஜோ ரூட் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். இந்தியாவுக்கு எதிராக தற்போது இங்கிலாந்து சொந்த மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அத்தொடரில் 3 மற்றும் 4வது போட்டிகளில் அடுத்தடுத்த சதங்களை அடித்த அவர் இங்கிலாந்தை முன்னிலைப்படுத்தி நிறைய சாதனைகளைப் படைத்து வருகிறார்.
குறிப்பாக ஜேக் காலிஸ், ரிக்கி பாண்டிங் ஆகியோரை முந்தியுள்ள அவர் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்களை குவித்த 2வது வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். 35 வயது மட்டுமே நிரம்பியுள்ள ரூட் இதுவரை 13400+ ரன்களை அடித்துள்ளார். இங்கிருந்து அவர் இன்னும் 3 – 4 வருடங்கள் விளையாடி 3000 ரன்கள் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் (15921 ரன்கள்) உலக சாதனையை ரூட் கண்டிப்பாக உடைப்பார் என்று இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் நம்புகிறார்கள். குறிப்பாக தம்முடைய சாதனையை உடைத்த ரூட் கண்டிப்பாக சச்சின் சாதனையையும் உடைப்பார் என்று பாண்டிங் கணித்துள்ளார். இந்நிலையில் ஜோ ரூட் புதிய உலக சாதனை படைத்தாலும் சச்சினாக முடியாது என்று கெவின் பீட்டர்சன் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
ஏனெனில் மிகவும் கடினமான பிட்ச்களை கொண்ட 1990 – 2010 வரையிலான காலகட்டங்களில் விளையாடிய சச்சின் உலகின் அனைத்து தரமான ஜாம்பவான் பவுலர்களையும் எதிர்கொண்டு உலக சாதனை படைத்ததாக பீட்டர்சன் கூறியுள்ளார். எனவே தம்மைப் பொறுத்த வரை சச்சின் சிறந்த பேட்ஸ்மேன் என்று மறைமுகமாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இதற்காக என்னை திட்டாதீர்கள்”
“ஆனால் இப்போதெல்லாம் பேட்டிங் செய்வது 20 – 25 வருடங்களுக்கு முன்பிருந்ததை விட எளிதாகி விட்டது. இந்தக் காலத்தை விட அந்தக் காலங்களில் பேட்டிங் செய்தது இரு மடங்கு கடினமாக இருந்தது. மேலும் வகார், சோயப் அக்தர், வாசிம் அக்ரம், முஸ்டாக், அனில் கும்ப்ளே, ஸ்ரீநாத், ஹர்பஜன், ஆலன் டொனாலட், ஷான் பொல்லாக், லன்ஸ் க்ளூஸ்னர், டேரன் கௌ, மெக்ராத், ஷேன் வார்னே, லீக், கில்லஸ்பி, ஷேன் பாண்ட்”
இதையும் படிங்க: நேத்து தான் அவனை பாராட்டுனேன்.. ஆனா இன்னைக்கு இதை சொல்லியே ஆகனும்.. கம்போஜ் குறித்து – அஷ்வின் பேச்சு
“டேனியல் வெட்டோரி, கிறிஸ் கேர்ன்ஸ், சமிந்தா வாஸ், முரளிதரன், கர்ட்லி ஆம்ப்ரோஸ், கோர்ட்னி வால்ஷ் என அந்தக் காலத்தில் இருந்த தரமான பவுலர்களின் பட்டியல் இன்னும் நீண்டுகொண்டே செல்லும். இங்கே 22 பவுலர்களின் பெயரைக் குறிப்பிட்டுள்ளேன். தயவு செய்து நீங்கள் நவீன கிரிக்கெட்டில் அவர்களைப் போன்ற 10 பவுலர்களின் பெயர்களைக் கொடுங்கள்” என்று கூறியுள்ளார்.