ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி இதுவரை 9 போட்டிகளில் 6 வெற்றி 3 தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் இருக்கும் டெல்லி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற அதிக வாய்ப்புள்ளது. அந்த அணியின் வெற்றிகளுக்கு நம்பிக்கை நட்சத்திரம் கேஎல் ராகுல் இதுவரை 364* ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றி வருகிறார்.
2017, 2018, 2019 ஐபிஎல் தொடர்களில் பட்டயை கிளப்பிய அவர் தலா 500க்கும் மேற்பட்ட ரன்கள் விளாசி உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். அதனால் இந்திய அணியில் ஷிகர் தவானை பின்னுக்குத் தள்ளிய அவர் ரோகித் சர்மாவுடன் களமிறங்கும் துவக்க வீரராக முன்னேறினார். கூடவே ஐபிஎல் தொடரில் கேப்டனாக செயல்பட்டதால் இந்தியாவின் துணைக் கேப்டனாகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
முன்னேறிய ராகுல்:
ஆனால் நாளடைவில் பெரிய ரன்கள் குவித்து அந்த வாய்ப்பை தக்க வைத்துக் கொள்வதற்காக குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய ராகுல் 2022 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு காரணமானார். அதே போல ஐபிஎல் தொடரிலும் லக்னோ அணியில் தடுமாறிய அவர் சரிவை சந்தித்தார். அதன் காரணமாக இந்திய டி20 அணியிலிருந்து ராகுல் ஒரேடியாக கழற்றி விடப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தவறுகளை உணர்ந்து மாற்றத்தைக் கொண்டு வந்து முன்னேற்றத்தைச் சந்தித்துள்ள ராகுல் இந்திய டி20 அணியில் 4வது இடத்தில் விளையாடத் தகுதியானவர் என்று இங்கிலாந்து ஜாம்பவான் மற்றும் டெல்லி ஆலோசகர் கெவின் பீட்டர்சன் ஆதரித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “டி20 கிரிக்கெட்டில் நான் கேஎல் ராகுலை நான்காவது இடத்தில் விளையாட வைப்பேன்”
பீட்டர்சன் ஆதரவு:
“இந்திய அணிக்கு நிறைய ஓப்பனிங் பேட்ஸ்மேன்களும் சூரியகுமார் டாப் ஆர்டரிலும் விளையாடுவது எனக்குத் தெரியும். ஆனால் தற்போது ராகுல் விளையாடும் விதத்திற்கு இந்திய அணியில் அவர் 4வது இடத்தில் விளையாடி கீப்பராக செயல்பட என்னுடைய முதல் தேர்வாக இருப்பார். கடந்த ஒரு வருடமாகவே நேர்மறையாக விளையாடும் அவர் இந்தியாவுக்காக சில போட்டிகளை ஃபினிஷிங் செய்து 2025 சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல உதவியதைப் பார்த்தேன்”
இதையும் படிங்க: பியூஷ் சாவ்லாவை பின்னுக்கு ஐ.பி.எல் கிரிக்கெட் வரலாற்றில் அசத்தல் சாதனையை நிகழ்த்திய – புவனேஷ்வர் குமார்
“அவரிடம் பேட்டிங் பற்றி நிறைய அர்த்தமான உரையாடல்களையும் கொண்டேன். இளம் வீரராக அடிப்படை கிரிக்கெட்டை மட்டுமே விளையாடிப் பழகிய அவர் மாற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். அது மிகவும் கடினமான ஒன்று. இருப்பினும் அதை ஏற்றுக்கொண்ட அவர் தன்னை சிறந்த முறையில் மாற்றிக் கொண்டுள்ளார். தற்போது நேர்மறையாக இருக்கும் அவர் பயிற்சி எடுக்கும் விதம், விளையாட்டைப் பற்றி சிந்திக்கும் விதம், பேசும் விதம் அனைத்தும் மாறியுள்ளது. அதுவே ராகுல்” என்று கூறியுள்ளார்.



