அது வரை மேட்ச் முடியாது.. அசுட்டோஸை வீடியோ காலில் வாழ்த்திய குரு தவான்.. பீட்டர்சன் பூரிப்புடன் பாராட்டு

Kevin Pieterson
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 4வது லீக் போட்டியில் லக்னோ கையில் வைத்திருந்த வெற்றியை டெல்லி 1 விக்கெட் வித்தியாசத்தில் பறித்தது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. மார்ச் 24ஆம் தேதி நடந்த அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய லக்னோ 210 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய டெல்லி 7-3 என சரிந்து பின்னர் 65-5 என மேலும் விழுந்தது.

அதனால் டெல்லி கண்டிப்பாக தோல்வியை சந்திக்கும் என்று நிறைய ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஏனெனில் அக்சர் படேல், ஜேக் பிரேசர், டு பிளேஸிஸ் என அந்த அணியின் முக்கிய வீரர்கள் அனைவரும் ஆரம்பத்திலேயே பெவிலியன் திரும்பினர். ஆனால் அப்போது மிடில் ஆர்டரில் இம்பேக்ட் வீரராக களமிறங்கிய அசுட்டோஸ் சர்மா நிதானமாக விளையாடினார்.

- Advertisement -

அசுட்டோஸ் அசத்தல்:

அவருக்கு கை கொடுத்த ட்ரிஷன் ஸ்டப்ஸ் 34 (22) ரன்கள் அடித்து அவுட்டானார். அதே போல அடுத்ததாக வந்த விப்ராஜ் நிகாம் தம்முடைய பங்கிற்கு லக்னோ பவுலர்களை வெளுத்து வாங்கி 39 (15) ரன்கள் குவித்து அவுட்டானார். அதை வீணடிக்காத அசுடோஸ் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி 5 பவுண்டரி 5 சிக்ஸருடன் 66* (31) ரன்கள் விளாசி அபார ஃபினிஷிங் கொடுத்தார்.

குறிப்பாக முதல் 20 பந்தில் 20 ரன்கள் மட்டுமே எடுத்த அவர் அடுத்த 11 பந்தில் 46 ரன்கள் குவித்து லக்னோவின் வெற்றியைப் பறித்தார். மேலும் ஐபிஎல் தொடரில் டெல்லி தங்களின் அதிகபட்ச ஸ்கோரை வெற்றிகரமாக சேசிங் செய்து சாதனைப் படைக்க உதவிய அசுட்டோஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். அந்த விருதை தம்முடைய குரு மற்றும் ஆலோசகர் ஷிகர் தவானுக்கு அர்ப்பணிப்பதாகவும் அவர் கூறினார்.

- Advertisement -

பாராட்டிய குரு:

பஞ்சாப் அணியில் ஷிகர் தவான் தலைமையில் அறிமுகமான அசுட்டோஸ் கடந்த சில வருடங்களாக ஓரளவு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அங்கே தமது பேட்டிங்கில் முன்னேறுவதற்கு உதவிய ஷிகர் தவானை மறக்காத அவர் தனது முதல் ஆட்டநாயகன் விருதை அர்ப்பணித்தார். அவருக்குப் போட்டி முடிந்ததும் ஷிகர் தவான் வீடியோ அழைப்பில் போன் செய்து மனதார வாழ்த்தினார்.

இதையும் படிங்க: ருதுராஜ் கெய்க்வாட்டை உதாரணமாக வைத்து ரோஹித் சர்மாவை குத்தி காட்டினாரா தோனி – விவாதத்தை கிளப்பிய பேட்டி

அதற்கு நன்றி தெரிவித்த அசுடோஸ் “ஷிகர் பாஜி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்” என்று சொன்னார். அது போக அசாத்தியமான வெற்றியை பெற்றுக்கொடுத்த அசுட்டோஸின் 2 தோள்களிலும் கை வைத்து டெல்லி அணியின் ஆலோசகர் கெவின் பீட்டர்சன் பூரிப்புடன் பாராட்டினர். குறிப்பாக “அசுடோஸ் களத்தில் இருக்கும் வரை போட்டி முடியாது என்று அருகில் இருந்தவர்களிடம் சொன்னேன்” என அவரது தோளில் தட்டி பீட்டர்சன் பாராட்டினார்.

Advertisement