
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரினை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்த டி20 தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் துவக்க வீரரான அபிஷேக் ஷர்மா தொடர் நாயகன் விருதினை வென்றிருந்தார்.
ஏற்கனவே இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை இந்திய அணி கைப்பற்றியிருந்த வேளையில் அந்த தொடரின் தொடர் நாயகன் விருதினை அபிஷேக் சர்மா வென்றிருந்தார். அதன்பிறகு தற்போது நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரிலும் தனது அற்புதமான பார்மை வெளிப்படுத்தி இந்த தொடரிலும் தொடர் நாயகன் விருதினை வென்று அசத்தியுள்ளார்.
இப்படி அடுத்தடுத்த தொடர் நாயகன் விருதினை வென்றுள்ள அபிஷேக் சர்மாவிற்கு வாழ்த்துகள் குவிந்து வரும் வேளையில் முன்னாள் இங்கிலாந்து அணியின் வீரரான கெவின் பீட்டர்சனும் அவரது இந்த சிறப்பான ஆட்டம் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் சில கருத்துக்களை வெளியிட்டு அபிஷேக் ஷர்மாவை வாழ்த்தியுள்ளார். அந்த வகையில் அவர் பகிர்ந்திருந்த அந்த பதிவில் குறிப்பிடப்பட்டதாவது :
இப்படி அடுத்தடுத்த தொடர்களில் அபிஷேக் சர்மா தொடர் நாயகன் விருதினை வெல்வதில் எனக்கு ஆச்சரியம் எதுவும் இல்லை. ஏனெனில் அபிஷேக் ஷர்மா தற்போதைய டி20 கிரிக்கெட்டின் முழு தரமான துவக்க வீரராக மாறியுள்ளார் அவரது பயமற்ற ஆட்டமும், மிகச் சிறப்பான துவக்கமும் அவர் எவ்வளவு திறமையான வீரர் என்பதை காட்டுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறியது போலவே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த இந்த டி20 தொடரில் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடியிருந்த அபிஷேக் ஷர்மா தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 40 ரன்கள் சராசரியுடன் 161 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 163 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அதிலும் குறிப்பாக மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் போது அவர் அடித்த 68 ரன்கள் பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றிருந்தது.
இதையும் படிங்க : பெங்கால் கிரிக்கெட் வாரியம் சார்பில் ரிச்சா கோஷுக்கு வழங்கப்பட்ட வித்தியாசமான பரிசுத்தொகை – கங்குலி வாழ்த்து
அதோடு பிரிஸ்பேன் நகரில் கடைசியாக நடைபெற்ற ஐந்தாவது டி20 போட்டியில் 23 ரன்களை அவர் அடித்திருந்த வேளையில் சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையையும், குறைந்த பந்தில் 1000 டி20 ரன்களை அடித்த சர்வதேச வீரர் என்ற சாதனையும் அவர் நிகழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.