திடீரென காணாமல் போன இந்திய வீரர் கேதர் ஜாதவின் தந்தை – மாபெரும் உதவி செய்த ரோஹித் ரசிகை? நடந்தது என்ன

- Advertisement -

மகாராஷ்ட்ர மாநிலத்தைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் கேதார் ஜாதவ் கடந்த 2010 முதல் உள்ளூர் தொடர்களில் போராடி நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி கடந்த 2014ஆம் ஆண்டு இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். ஆரம்ப காலங்களில் தடுமாறினாலும் 2018 வாக்கில் சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் பகுதி நேர பந்து வீச்சாளராகவும் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் இங்கிலாந்தில் நடைபெற்ற 2019 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தேர்வாகி விளையாடி ரசிகர்களிடம் புகழ்பெற்றார். இருப்பினும் 2019 உலக கோப்பைக்கு பின் தடுமாற்றமான செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் கடைசியாக கடந்த 2020 பிப்ரவரி மாதம் இந்தியாவுக்காக விளையாடியிருந்தார்.

இந்நிலையில் புனேவில் வசித்து வரும் கேதர் ஜாதவ் தந்தை மகாதேவ் ஜாதவ் நேற்று காலை திடீரென்று காணாமல் போயுள்ளார். குறிப்பாக 75 வயதாகும் அவரை நேற்று வழக்கம் போல காலை நேரத்தில் நடை பயிற்சி எடுப்பதற்காக பார்க் பகுதிகளுக்கு கேதர் ஜாதவ் அழைத்துச் சென்றுள்ளார். அப்போது அவரை சுதந்திரமாக நடமாட விட்டுவிட்டு வழக்கம் போல கேதார் ஜாதவ் பயிற்சிகளை எடுத்துள்ளார். ஆனால் அதை முடித்து விட்டு திரும்பிப் பார்க்கும் போது வாசல் பகுதியில் நின்று கொண்டிருந்த அவரது தந்தை திடீரென்று காணாமல் போனதால் பதற்றமடைந்த அவர் முடிந்தளவுக்கு அந்த பகுதிகளில் தேடியும் கிடைக்கவில்லை.

- Advertisement -

ரசிகையின் உதவி:
போதாகுறைக்கு கையில் மொபைல் போன் எதுவும் வைத்துக் கொள்ளாத அவருடைய தந்தை டிமான்டியா காரணமாக அவதிப்பட்டு வருவதாக தெரிகிறது. அதனால் எவ்வளவு தேடியும் தமது தந்தை கிடைக்காததால் வேறு வழியின்றி அருகில் இருக்கும் காவல்துறையினரிடம் கேதர் ஜாதவ் புகார் செய்துள்ளார். அதைத்தொடர்ந்து போலீசார் தீவிரமாக தேடிய நிலையில் இந்த செய்தி சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்களில் வைரலானது.

அந்த நிலையில் நேற்று இரவு புனேவில் இருக்கும் முந்த்வா எனும் பகுதியில் அவர் வலம் வருவதை பார்த்த ஆர்த்தி தபாதே எனும் பெண் உடனடியாக அருகில் இருக்கும் காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். நல்ல வேளையாக இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ரோஹித் சர்மாவின் ரசிகையாக இருப்பதன் காரணமாக கேதார் ஜாதவ் தந்தை காணாமல் போன செய்தியை எப்படியோ அவர் தெரிந்து கொண்டுள்ளார். அந்த நிலையில் தனது கண் முன்னே வந்த அவரை அடையாளம் கண்டு கொண்ட அந்த பெண் உடனடியாக காவல்துறைக்கு தெரிவித்து பத்திரமாக அனுப்பி வைத்துள்ளார்.

- Advertisement -

அத்துடன் தனது ட்விட்டரில் கேதர் ஜாதவை குறிப்பிட்டு உங்களது தந்தை முந்த்வா காவல் நிலையத்தில் பத்திரமாக இருப்பதாகவும் உடனடியாக அங்கு சென்று மீட்டுச் செல்லுங்கள் என்றும் பதிவிட்டார். இருப்பினும் காவல்துறையினர் நேரடியாக தகவல் கொடுத்ததால் உடனடியாக அங்கு விரைந்த கேதார் ஜாதவ் தன்னுடைய தந்தையை பத்திரமாக மீட்டுச் சென்றார். தற்போது தனது தந்தை பத்திரமாக இருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள கேதார் ஜாதவ் அவர் கிடைக்க வேண்டும் என்றும் அவரை கண்டுபிடிப்பதற்கு உதவிய அனைத்து ரசிகர்களுக்கு மனமார நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அதை விட அவரது தந்தையை கண்டுபிடிக்க உதவிய அந்த பெண் ரசிகைக்கு இந்திய அணியின் ரசிகர்கள் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்து வருகிறார்கள். மேலும் உங்களுக்கு தந்தையை இனியாவது பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்று கேதர் ஜாதவுக்கு ரசிகர்கள் அறிவுரை வழங்குகிறார்கள். முன்னதாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை இழந்த கேதார் ஜாதவ் ஐபிஎல் தொடரிலும் சென்னை அணிக்காக மோசமாக செயல்பட்டு மிகப்பெரிய கிண்டல்களுக்கு உள்ளானார்.

இதையும் படிங்க: IPL 2023 : இதெல்லாம் நியாயமே இல்ல. சேப்பாக்கம் மைதான நிர்வாகத்தின் மீது – சென்னை ரசிகர்கள் அதிருப்தி

அதனால் சென்னை அணியிலும் கழற்றி விடப்பட்ட அவர் விரைவில் துவங்கும் ஐபிஎல் தொடரில் எந்த அணிக்காகவும் விளையாட தேர்வாகவில்லை. மேலும் கடைசியாக நடைபெற்ற ரஞ்சிக் கோப்பையில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடிய அவர் 37 வயதை கடந்து விட்டதால் இனி இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு முடிந்து போனதாகவே பார்க்கப்படுகிறது.

Advertisement