இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் 2025-ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக வீரர்களின் மெகா ஏலமானது வரும் நவம்பர் 24 மற்றும் 25ஆம் தேதி சவுதி அரேபியாவில் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கு முன்னதாக ஏற்கனவே இந்த மெகா ஏலத்தில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் தங்களுக்கு அணியில் தக்க வைக்க விரும்பிய வீரர்களின் பட்டியலை வெளியிட்டு விட்டது.
ரிஷப் பண்டை சி.எஸ்.கே வாங்கப்போகிறதா? :
அந்த வகையில் ஐந்து முறை ஐபிஎல் கோப்பையை வென்ற சாம்பியன் அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, பதிரானா, ஷிவம் துபே, தோனி ஆகிய ஐந்து வீரர்களை 65 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்து தக்கவைத்த வீரர்களாக அறிவித்தது. இதன் காரணமாக எஞ்சியுள்ள 55 கோடியுடன் ஏலத்தை அணுகவுள்ளது.
இந்நிலையில் இந்த மெகா காலத்தில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டும் கலந்து கொண்டுள்ளதால் அவருக்கு பெரிய தொகை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு தோனி ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுவதால் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட்டை ஏலத்தில் சிஎஸ்கே எடுக்க ஆர்வம் காட்டும் என்று கடந்த சில வாரங்களாகவே பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்நிலையில் பெரிய தொகைக்கு நாங்கள் யாரையும் வாங்கப்போவதில்லை என சி.எஸ்.கே அணியின் மூத்த நிர்வாகியான காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : வீரர்களை தக்க வைப்பதற்கு முன்பதாகவே தற்போதைய கேப்டன் ருதுராஜ் மற்றும் முன்னாள் கேப்டன் தோனி பயிற்சியாளர் பிளம்மிங் ஆகியோருடன் அணி நிர்வாகம் சார்பாக நாங்கள் ஏற்கனவே விவாதித்து விட்டோம்.
முந்தைய ஆண்டுகளில் அணிக்காக நம்பகத்தன்மையுடன் விளையாடிய வீரர்களை நாங்கள் தக்க வைத்து தெளிவான முடிவை எடுத்துள்ளோம். மேலும் தற்போது குறைந்த கையிருப்பு பணத்துடன் நாங்கள் ஏலத்திற்கு செல்ல வேண்டும் என்பதால் பெரிய அளவில் எந்த ஒரு வீரரையும் போட்டி போட்டு ஏலத்தில் எடுக்க முடியாது.
இதையும் படிங்க : அந்த வீடியோக்களை பாத்தேன்.. இந்திய அணியில் கம்பேக் கொடுக்க இதை செஞ்சேன்.. சக்ரவர்த்தி பேட்டி
இருந்தபோதும் முடிந்தவரை முயற்சி செய்வோம். ஆனாலும் அதற்கான வாய்ப்பு இருக்காது என்று அவர் கூறியுள்ளார். இதன்மூலம் ரிஷப் பண்டை சென்னை அணி ஏலத்தில் எடுக்காது என்று தெரிகிறது.



