இந்திய கிரிக்கெட் அணியில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி சிறப்பான கம்பேக் கொடுத்து அசத்தி வருகிறார். டிஎன்பிஎல் தொடரில் அசத்தியதால் கொல்கத்தா அணியில் அவர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினார். அதனால் இந்திய அணிக்காக தேர்வான அவர் 2021 டி20 உலகக் கோப்பையிலும் ஆச்சரியப்படும் வகையில் தேர்வானார். ஆனால் அந்த வாய்ப்பில் அவர் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
அதனால் கழற்றி விடப்பட்ட அவர் கடினமாக உழைத்து கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். அந்த நிலையில் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற கௌதம் கம்பீர் அவருடைய திறமையை அறிந்து மீண்டும் இந்திய அணிக்குள் கொண்டு வந்துள்ளார். அந்த வாய்ப்பில் கடந்த வங்கதேச தொடரில் அசத்திய வருண் சக்கரவர்த்தி இந்தியா கோப்பையை வெல்ல உதவினார்.
சக்ரவர்த்தி கம்பேக்:
அதன் காரணமாக நடைபெற்று வரும் தென்னாப்பிரிக்க டி20 தொடரிலும் வாய்ப்பு பெற்ற அவர் 2வது போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்தார். அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெளிநாட்டு அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் சிறந்த பவுலிங்கை பதிவு செய்த இந்திய வீரர் என்ற குல்தீப் யாதவ் சாதனையை வருண் சக்கரவர்த்தி சமன் செய்தார். இந்நிலையில் இந்திய அணியில் மீண்டும் விளையாடுவதற்கு தனது பந்து வீச்சில் செய்த மாற்றங்கள் பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“அதற்காக மீண்டும் வரைபடத்திற்கு சென்று என்னுடைய பழைய வீடியோக்களையும் பார்த்தேன். அதில் நான் ஏன் உச்சமாக வீசுவதில் வேலை செய்யாமல் சைட் ஸ்பின் பந்துகளை வீசுகிறேன் என்பதை கண்டறிந்தேன். அதனால் என்னுடைய பந்து வீச்சை முழுமையாக மாற்ற வேண்டியிருந்தது. அதற்காக நான் 2 வருடங்கள் எடுத்துக் கொண்டேன்”
வாய்ப்பு கிடைச்சா போதும்:
“அந்த மாற்றங்களை உள்ளூர் தொடர்கள், டிஎன்பிஎல், சயீத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே, ஐபிஎல் போன்ற தொடர்களில் செய்து பார்த்தேன். அதில் வெற்றிகரமாக செயல்பட்டதால் தற்போது சர்வதேச அளவிலும் புதிய டெக்னிக்கை பயன்படுத்துகிறேன். இந்த புதிய பவுலிங் சைட் ஸ்பின் மற்றும் ஓவர் ஸ்பின் ஆகியவற்றின் கலவையாகும்”
இதையும் படிங்க: கெளதம் கம்பீர் இதுக்கு தகுதியானவர் இல்ல.. இனியாச்சும் அவங்கள அனுப்புங்க.. பிசிசிஐக்கு மஞ்ரேக்கர் அட்வைஸ்
“ஓவர்ஸ்பின் பந்துகள் பிட்ச்சில் அதிகமாக சுழன்று தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதை என்னுடைய நாட்டுக்காக தொடர்ந்து செய்வேன் என்று நம்புகிறேன்” எனக் கூறினார். மேலும் இந்திய அணியில் தொடர்ந்து அதிகமாக வாய்ப்புகள் கிடைப்பதை விரும்புவதாக வருண் சக்கரவர்த்தி கூறினார். அவ்வாறு கிடைக்கும் போது இன்னும் தம்மால் சிறப்பாக விளையாடி வெற்றிகளில் பங்காற்ற முடியும் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.



