ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலிருந்து ரவீந்திர ஜடேஜா டிரேடிங் முறையில் ராஜஸ்தானுக்கு மாற்றப்பட்டுள்ளார். அதே போல இங்கிலாந்தின் ஆல்ரவுண்டர் சாம் கரணையும் டிரேடிங் முறையில் சென்னை அணி ராஜஸ்தானுக்கு கொடுத்துள்ளது. அதற்கு பதிலாக சிஎஸ்கே அணி சஞ்சு சாம்சனை ராஜஸ்தான் அணியிடமிருந்து 18 கோடிக்கு வாங்கியுள்ளது.
அப்படி சாம்சன் எனும் ஒரு வீரரை சென்னை அணி எதற்காக 2 வீரர்களை கொடுத்து வாங்க வேண்டும்? என்பது பலருடைய கேள்வியாக இருக்கிறது. குறிப்பாக 2012 முதல் விளையாடி வந்த ரவீந்திர ஜடேஜா சிஎஸ்கே அணிக்காக அதிக ஆட்டநாயகன் விருது வென்ற வீரராக சாதனை படைத்துள்ளார். அது போக 2018, 2021, 2023 ஆகிய 3 கோப்பைகளை சிஎஸ்கே வெல்வதற்கு அவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.
ஜடேஜாவுக்கு பதிலாக:
குறிப்பாக 2023 இறுதிப் போட்டியில் கைமீறிய வெற்றியைக் கடைசி நேரத்தில் ஜடேஜா பெற்றுக் கொடுத்ததை மறக்க முடியாது. எனவே டிரேடிங் சம்பந்தமான செய்திகள் வந்ததிலிருந்தே ஜடேஜாவை விடக்கூடாது என்று நிறைய சிஎஸ்கே ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒருவேளை தோனி ஓய்வு பெற்றால் தரமான விக்கெட் கீப்பர் கிடைக்க மாட்டார் என்று சிஎஸ்கே நினைக்கலாம்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் உர்வில் பட்டேல் போன்ற இளம் வீரருக்கு வாய்ப்பளித்து வளர்த்தால் வருங்காலமும் வளமாகும் என்று ரசிகர்கள் தெரிவித்தனர். ஆனால் கடைசி வரை ஜடேஜாவை கொடுத்த சென்னை அணி சாம்சனை அடம் பிடித்து வாங்கியுள்ளது என்றே சொல்லலாம். இந்நிலையில் தங்களுக்கு சாம்சன் போன்ற தரமான இந்திய பேட்ஸ்மேன் தேவைப்படுவதாக சிஎஸ்கே அணியின் தலைமை நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சாம்சனை வாங்கிய சென்னை:
ஆனால் மினி ஏலத்தில் சாம்சன் போன்றவரை வாங்க முடியாது என்பதாலேயே டிரேடிங் முறையில் வாங்கியதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இந்த முடிவு இரு வீரர்களிடமும் பேசி அவர்களுடைய சம்மதத்தைப் பெற்ற பின்பே எடுக்கப்பட்டுள்ளது. எங்களுடைய சில வீரர்கள் (தோனி) கேரியரின் இறுதிக் காலத்தில் உள்ளனர். எனவே அடுத்த சில வருடங்களுக்குள் சிஎஸ்கே அணியை மறுகட்டமைப்பு செய்வது முக்கியம்”
இதையும் படிங்க: கொடுத்த சத்தியத்தை உடைத்து ரசலை கழற்றி விட்ட கொல்கத்தா.. 5 வருடத்தில் மாறிய வாக்கு.. ரிட்டெய்ன் லிஸ்ட்
“அது போன்ற சூழ்நிலையில் ஒரு சிறந்த இந்திய பேட்ஸ்மேனை (சாம்சன்) வாங்கும் வாய்ப்பு எங்களுக்கு மினி ஏலத்தில் கிடைக்காது. அதனாலேயே இந்த முடிவை எடுத்தோம். இது சில ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுக்கலாம். ஆனால் சிஎஸ்கே அணியின் தற்போதைய நிலை மற்றும் வருங்காலத்தைக் கருத்தில் கொண்டு மாற்றம் தேவைப்படுகிறது. இம்முடிவால் வருங்காலத்தில் சிஎஸ்கே அணி நிலையாக வெற்றிகரமான செயல்திறனை வெளிப்படுத்தும் என்று நம்புகிறேன்” எனக் கூறினார்.



