ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. அதன்படி 3 முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பல நட்சத்திர வீரர்களை கழற்றி விட்டுள்ளது.
குறிப்பாக காட்டுத்தனமாக அடித்து நொறுக்கி வெற்றியைப் பறிக்கக்கூடிய வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் ஆண்ட்ரே ரசலை கொல்கத்தா கழற்றி விட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஏனெனில் 2014ஆம் ஆண்டு வாங்கப்பட்டது முதல் கொல்கத்தா அணிக்காக அவர் மேட்ச் வின்னராக விளையாடி வருகிறார். பல போட்டிகளில் முக்கிய நேரத்தில் தனியாளாக அடித்து நொறுக்கியுள்ள அவர் கொல்கத்தாவை வெற்றி பெற வைத்துள்ளார்.
2020இல் கொடுத்த சத்தியம்:
அதன் காரணமாக ஓய்வு பெறும் வரை ரசல் தங்களுடைய அணிக்காக மட்டுமே விளையாடுவார் என்று கொல்கத்தா அணியின் இயக்குனர் வெங்கி மைசூர் தெரிவித்தார். இது பற்றி 2020 மே மாதம் 3ஆம் தேதி மதியம் 12.24 மணிக்கு ட்விட்டரில் (எக்ஸ்) வெங்கி பதிவிட்டது பின்வருமாறு. “இந்த விளையாட்டில் நீங்கள் ஓய்வு பெறும் வரையிலும் அதையும் தாண்டியும் நைட் ரைடராக இருப்பீர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ரசல்” என்று பதிவிட்டிருந்தார்.
மறுபுறம் தம்மை பல கோடிகள் கொடுத்து வாங்கி ஆதரவளித்த கொல்கத்தாவுக்கு தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ரசல் 2024 ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார். இருப்பினும் கடந்த வருடம் கொஞ்சம் தடுமாற்றமாக விளையாடிய அவரை தற்போது கொல்கத்தா கழற்றி விட்டுள்ளது. அந்த வகையில் கொடுத்த சத்தியத்தை 5 வருடத்திற்குள் மீறிய கொல்கத்தா ரசலை கழற்றி விட்டுள்ளது என்றே சொல்லலாம்.
உடைத்த கொல்கத்தா:
இதுவரை கொல்கத்தாவுக்கு 133 போட்டிகளில் விளையாடியுள்ள ரசல் 2593 ரன்களை 174.97 என்று அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்துள்ளார். குறிப்பாக 2019இல் மட்டும் 510 ரன்கள் குவித்த அவர் மொத்தமாக 123 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். அவருடன் 23.75 கோடிகளுக்கு விளையாடிய வெங்கடேஷ் ஐயர் சுமாராக விளையாடியதால் இம்முறை கொல்கத்தா அணியிலிருந்து கழற்றி விடப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: சச்சின் டெண்டுல்கரை பின்னுக்கு தள்ளி அசத்தலான சாதனையை நிகழ்த்திய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – விவரம் இதோ
அத்துடன் குயிண்டன் டீ கான், மொய்ன் அலி, அன்றிச் நோர்ட்ஜெ, ஸ்பென்சர் ஜான்சன் ரஹ்மத்துல்லா குர்பாஸ் ஆகியோரையும் கழற்றி விட்டுள்ள கொல்கத்தா 64.30 கோடிகளுடன் ஏலத்தில் களமிறங்க உள்ளது. கொல்கத்தா தக்க வைத்துள்ள வீரர்கள்: அஜிங்க்ய ரஹானே, அங்கிரிஸ் ரகுவன்சி, அங்குள் ராய், ஹர்ஷிட் ராணா, மணிஷ் பாண்டே, ரமன்தீப் சிங், ரோவ்மன் போவல், சுனில் நரேன், உம்ரான் மாலிக், வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி



