
கர்நாடகாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் கருண் நாயர் கடந்த 2016 சென்னை டெஸ்ட் போட்டியில் முச்சதத்தை அடித்து சாதனை படைத்தார். அதனால் சேவாகிற்கு நிகராக சாதனை படைத்த அவர் அதற்கடுத்த போட்டிகளில் அசத்ததில்லை. அதன் காரணமாக கழற்றி விடப்பட்ட அவருக்கு இதுவரை இந்திய அணியில் மறு வாய்ப்பு கிடைக்கவில்லை.
அந்த வாய்ப்பைப் பிடிக்கப் போராடி வரும் கருண் நாயர் கடந்த விஜய் ஹசாரே கோப்பையில் அபாரமாக விளையாடி பெரிய ரன்கள் குவித்தார். அதன் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பையில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஏற்கனவே நன்றாக விளையாடி 40க்கும் மேற்பட்ட சராசரியை கொண்டுள்ள வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு வாய்ப்பு இல்லை என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்தார்.
இந்நிலையில் இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்காவிட்டாலும் குறைந்தபட்சம் தெளிவை தெரிவித்ததற்கு அகர்கருக்கு கருண் நாயர் நன்றி தெரிவித்துள்ளார். அதே போல தமக்கு கிடைத்த வாய்ப்பைத் தாமும் சரியாக பயன்படுத்தவில்லை என்று அவர் கூறியுள்ளார். இருப்பினும் மீண்டும் நாட்டுக்காக விளையாட போராடுவேன் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “எனது இடத்தைப் பற்றிய தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டதைப் பார்த்தது நன்றாக இருந்தது”
“அதன் காரணமான குறைந்தபட்சம் நான் ரஞ்சிக்கோப்பையின் அடுத்த போட்டியில் கவனம் செலுத்துவேன். கடந்த 16 – 18 மாதங்களில் செய்த அதே பேட்டிங்கை இப்போதும் நான் செய்து வருகிறேன். அதுவே இன்றைய நாளில் நான் அதிர்ஷ்டத்துடன் நிற்பதற்கான காரணமாக அமைந்தது. பெரிதாக எந்த மாற்றத்தையும் செய்யவில்லை”
“கடந்த 3 – 4 வருடங்களில் செய்த அதே செயல்முறைகளைப் பின்பற்றி நாட்டுக்காக விளையாட முயற்சிப்பேன். 300 ரன்கள் அடித்த பின் 4 இன்னும் சில மட்டுமே விளையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்த நான்கில் 2 இன்னிங்ஸில் 25 – 30 போன்ற நல்ல துவக்கமும் கிடைத்தது. எனது வாய்ப்புகளை 2 விதத்தில் பார்க்கலாம். ஒருவேளை அந்த 4 இன்னிங்ஸில் பெரிய ரன்கள் குவித்திருந்தால் என்னுடைய இடத்தை உறுதி செய்திருக்க முடியும்”
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி தொடரின் ஒரே போட்டியில் அதிகபட்ச ரன்களை அடித்த இந்திய வீரர் யார் தெரியுமா? – விவரம் இதோ
“அதை நான் சரியாக பயன்படுத்தவில்லை என்று என்னை நானே விமர்சிக்க முடியும். மறுபுறம் பார்த்தால் முச்சதம் அடித்த பின் எனக்கு 4 இன்னிங்ஸ் மட்டுமே கிடைத்தது. அந்த மேடு பள்ளமான வாய்ப்புகளில் முச்சதம் அடித்த பின் ஆஸ்திரேலிய தொடரில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. உள்ளூரில் நிறைய ரன்கள் குவித்து 2018 இங்கிலாந்து தொடரில் கம்பேக் கொடுத்தும் பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது 3வது முறையாக கம்பேக் கொடுக்க முயற்சிக்கும் என்னுடைய பயணம் சவாலானது உணர்வுபூர்வமானது” என்று கூறினார்.