ப்ளீஸ் எனக்கு ஒரு சான்ஸ் தருவீங்களா, ஆதங்கத்துடன் இந்திய வீரர் கோரிக்கை – நிதர்சனத்தை உணர்த்தும் ரசிகர்கள்

Karun-1
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணிகளில் ஒன்றாக திகழும் இந்திய கிரிக்கெட் அணியில் ஒரு இடத்திற்கு பன்முகப் போட்டி நிலவுவது சகஜமாகும். அதில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டால் தான் தொடர்ந்து விளையாடும் வாய்ப்புகளை பெற முடியும். சொல்லப் போனால் இப்போதெல்லாம் சிறப்பாக செயல்படும் சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு கூட தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த கருண் நாயரும் வாய்ப்புக்காக நீண்ட காலம் காத்திருக்கிறார். உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தலாக செயல்பட்டதால் கடந்த 2016ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற கடைசி போட்டியில் அற்புதமாக செயல்பட்ட அவர் ஜாம்பவான் வீரேந்திர் சேவாக்கிற்கு பின் முச்சதம் அடித்த 2வது இந்திய வீரராக சாதனை படைத்தார்.

மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் குறைந்த இன்னிங்ஸில் முச்சதம் அடித்த வீரர் என்ற சாதனையும் படைத்த அவர் அதன் பின் பெரிய அளவில் வாய்ப்புகளை பெறாமல் மொத்தமாக கழற்றி விடப்பட்டார். அதற்கான காரணத்தை இந்திய அணி நிர்வாகம் சொல்லாத நிலையில் மீண்டும் விளையாடுவதற்காக உள்ளூர் கிரிக்கெட்டில் அவர் வழக்கு போல விளையாடினார். அதனால் முச்சதம் அடித்த கருண் நாயருக்கு மேற்கொண்டு வாய்ப்பு வழங்காதது ஏன் என்று சமீப காலங்களில் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசுவதை பார்க்க முடிகிறது.

- Advertisement -

ப்ளீஸ் சான்ஸ் கொடுங்க:
இந்நிலையில் விரைவில் வங்கதேச டெஸ்ட் தொடர் நடைபெறும் நிலையில் “அன்பான கிரிக்கெட், எனக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடு” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ள கருண் நாயர் “ப்ளீஸ் எனக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்” என்ற வகையில் இந்திய அணி நிர்வாகத்திடம் மறைமுகமாக கோரிக்கை வைத்துள்ளார். குறிப்பாக கேரியர் முடிந்ததாக கருதப்பட்ட ஜெயதேவ் உனட்கட் 12 வருடங்கள் கழித்து யாருமே எதிர்பாராத வகையில் வங்கதேச தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதை மனதில் வைத்து அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளதாக தெரிகிறது. அதைப் பார்க்கும் சில ரசிகர்கள் ஆதங்கத்துடன் அவருக்கு வாய்ப்பு கொடுக்குமாறு ஆதரவு கொடுக்கிறார்கள்.

ஆனால் உண்மையாகவே மீண்டும் இந்திய அணிக்காக விளையாடும் அளவுக்கு அவர் சிறப்பாக செயல்படவில்லை என்பதே நிதர்சனம். ஏனெனில் சென்னையில் முச்சதம் அடித்த கருண் நாயருக்கு அடுத்ததாக கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அதில் அடுத்தடுத்த போட்டிகளில் சுமாராக செயல்பட்ட காரணத்தாலேயே மொத்தமாக கழற்றி விடப்பட்ட அவருக்கு பதிலாக இளம் வீரர்களை தேடிய பயணத்தை நோக்கி இந்திய அணி நிர்வாகமும் நகர்ந்தது.

- Advertisement -

மறுபுறம் ஜெயதேவ் உனட்கட் 2019 சீசனில் அதிக விக்கெட்களை எடுத்து கேப்டனாக தன்னுடைய சௌராஷ்டிரா அணிக்கு முதல் முறையாக ரஞ்சி கோப்பையை வென்று கொடுத்ததுடன் சமீபத்தில் நடைபெற்று முடிந்த விஜய் ஹசாரே கோப்பையையும் வென்று கொடுத்த காரணத்தால் 12 வருடங்கள் கழித்து இந்திய அணிக்குள் கம் பேக் கொடுத்துள்ளார். ஆனால் இவரோ இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற லட்சியத்தை கொண்டிருந்தாலும் உள்ளூர் கிரிக்கெட்டில் அதற்கேற்றார் போல் சமீப காலங்களில் செயல்படாத காரணத்தால் சமீபத்தில் நடைபெற்ற முடிந்த சயீத் முஷ்டாக் அலி கோப்பை மற்றும் விஜய் ஹசாரே கோப்பை ஆகிய தொடர்களில் விளையாடிய கர்நாடகா அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

அத்துடன் விரைவில் நடைபெறும் ரஞ்சி கோப்பையிலும் கழற்றி விடப்பட்டுள்ளார். மேலும் ஏற்கனவே ஐபிஎல் தொடரிலும் சொதப்பலாக செயல்படும் நிலையில் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படாமல் இருந்தால் எப்படி இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்று நிறைய ரசிகர்கள் அவருக்கு பதிலளிக்கிறார்கள்.

இதையும் படிங்க: கஷ்டமா தான் இருக்கு ஆனா இளம் வீரர்கள் வந்து விட்டதால் அவரோட கேரியர் முடிஞ்சுடிச்சு – நிதர்சனத்தை பேசிய டிகே

அதனால் முதலில் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படுங்கள் அதை செய்தால் வாய்ப்பு நீங்கள் கேட்க வேண்டியதில்லை ஜெயதேவ் உடன்கட் போல தாமாகவே தேடி வரும் என்றும் நிறைய ரசிகர்கள் ஆதங்கப்படும் கருன் நாயருக்கு ஆறுதலை தெரிவிக்கிறார்கள்.

Advertisement