ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியானது தங்களது முதலாவது போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. அதனை தொடர்ந்து எதிர்வரும் செப்டம்பர் 14-ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. நாளை மறுதினம் துபாயில் நடைபெற இருக்கும் இந்த போட்டிக்காக தற்போது இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய வீரர்கள் போட்டியில் மட்டும் கவனத்தை வையுங்கள் : கபில் தேவ் அறிவுரை
இந்தியாவில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலுக்கு பிறகு இருநாட்டு தொடர் எப்போதுமே நடைபெறாது என்று பிசிசிஐ அறிவித்த வேளையில் ஐசிசி-யால் ஏற்பாடு செய்யப்படும் பொதுவான தொடர்களில் மட்டுமே இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. ஆனாலும் இந்த ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடக் கூடாது என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
ஆனால் பிசிசிஐ வெளியிட்டிருந்த அறிக்கையில் : இந்த போட்டி பொதுவான ஒரு நாட்டில் நடப்பதனாலும் பல்வேறு நாடுகள் இந்த தொடரில் பங்கேற்றுள்ளதால் இந்த போட்டியில் இந்திய அணி விளையாடு தவிர்க்க முடியாது என்றும் இந்திய அணி திட்டமிட்டபடி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுவதில் எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது என்று தெரிவித்திருந்தது.
இதன் காரணமாக இந்த போட்டியானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்த போட்டியில் விளையாட இருக்கும் இந்திய அணியின் வீரர்களுக்கு முன்னாள் கேப்டனான கபில் தேவ் ஒரு அறிவுரையை வழங்கி உள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
இந்திய அணி எதிர்வரும் ஆட்டத்தின் மீது மட்டுமே முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். நம்மிடம் சிறந்த அணி இருக்கிறது எந்த ஒரு கவனச் சிதறலும் இல்லாமல் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடி வெற்றி பெற்றாக வேண்டும். அதை மட்டுமே நாம் கருத்தில் கொண்டு விளையாட வேண்டியது அவசியம். அரசாங்கம் தங்களது வேலையை பார்த்துக் கொள்ளும்.
இதையும் படிங்க : கம்பீர் மற்றும் சூரியகுமார் யாதவ் 2 பேரும் போடுறது தப்பு கணக்கு.. சுட்டிக்காட்டிய ரவிச்சந்திரன் அஷ்வின் – விவரம் இதோ
வீரர்களாகிய நீங்கள் உங்களது வேலையை சரியாக செய்து அணிக்கு வெற்றியை தேடி தாருங்கள். ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான ஆட்டம் மிகச் சிறப்பாக இருந்தது. அதேபோன்று இனிவரும் போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று கோப்பையை இந்திய அணி வெல்லும் என்று தான் நம்புவதாகவும் கபில் தேவ் கூறியது குறிப்பிடத்தக்கது.



