சச்சின் – விராட் கோலி ஆகியோரில் சிறந்த ப்ளேயர் யார்? நீண்ட நாள் விவாதத்துக்கு கபில் தேவ் பதில்

sachin tendulkar kapil dev virat kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பேட்டிங் துறையில் சச்சின் டெண்டுல்கர் மிகச் சிறந்த வீரர்களில் முதன்மையானவராக போற்றப்படுகிறார். குறிப்பாக 16 வயதிலேயே அறிமுகமாகி வாசிம் அக்ரம் முதல் கிளன் மெக்ராத் வரை உலகத்தரம் வாய்ந்த ஜாம்பவான் பவுலர்களை எதிர்கொண்ட அவர் தன்னைத்தானே மெருகேற்றிக் கொண்டு நாளடைவில் ரன் மெசினாக மாறி 2011 உலககோப்பை உட்பட நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். அதிலும் 90களில் அவர் அடித்தால் தான் இந்தியா வெற்றி பெறும் என்ற நிலைமை இருந்ததை மறக்கவே முடியாது. அந்த வகையில் 24 வருடங்களாக இந்திய பேட்டிங்கை தனது தோள் மீது அவர் சுமந்த பாரத்தை தற்போது விராட் கோலி சுமந்து வருகிறார் என்றே சொல்லலாம்.

- Advertisement -

2008 அண்டர்-19 உலகக் கோப்பை வென்ற கேப்டனாக சாதனை படைத்து சீனியர் கிரிக்கெட்டின் அறிமுகமான அவர் ஆரம்பத்தில் தடுமாறினாலும் சச்சின் ஓய்வு பெற்ற 2013க்குப்பின் அவரைப் போலவே ரன் மெஷினாக உலகின் பல்வேறு நாடுகளில் உலகத்தரம் வாய்ந்த பவுலர்களை சிம்ம சொப்பனமாக எதிர்கொண்டு ஏராளமான ரன்களையும் சதங்களையும் விளாசி நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வருகிறார். இருப்பினும் சச்சின் டெண்டுல்கர் தான் மிகச் சிறந்த வீரர் விராட் கோலி தான் தரமானவர் என்ற விவாதங்களும் ஒப்பீடுகளும் இருந்து கொண்டே தான் இருக்கின்றன.

கபில் தேவ் கருத்து:
குறிப்பாக அப்போது ஒரு போட்டிக்கு ஒரு பந்து மட்டுமே பயன்படுத்தப்பட்ட நிலையில் இப்போது 2 புதிய பந்துகள் பயன்படுத்தப்படுவதுடன் உள்வட்டத்திற்குள் 5 பீல்டர்கள் நிறுத்தப்படுவதால் விராட் கோலி அடிக்கும் சதங்களை சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட முடியாது என்று முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் விமர்சித்திருந்தார். அந்த வகையில் சச்சின் டெண்டுல்கரை தன்னுடைய குருவாக விராட் கோலி மதித்து விளையாடி வந்தாலும் நீண்ட காலமாகவே இருவரில் சிறந்தவர் யார் என்ற விவாதங்கள் அரங்கேறிய வண்ணம் தான் இருக்கின்றன.

இந்நிலையில் அவரவர் காலத்தில் அவரவர்கள் சிறந்த வீரர் என்று தெரிவிக்கும் முன்னாள் ஜாம்பவான் கேப்டன் கபில் தேவ் எப்போதுமே ஏற்கனவே விளையாடியவர்களை மிஞ்சும் வகையில் அடுத்த தலைமுறை வீரர்கள் செயல்படுவார்கள் என்று இந்த விவாதத்துக்கு நடுநிலையுடன் பதிலளித்துள்ளார். அதே சமயம் தற்போது அசத்தும் வீரர்களை விட வருங்காலங்களில் வரும் வீரர்கள் இன்னும் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதால் இந்த விவாதங்கள் இருந்து கொண்டே தான் இருக்கும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தது பின்வருமாறு.

- Advertisement -

“இது போன்ற ஜாம்பவான் அந்தஸ்துடைய வீரர் இடத்தில் ஒன்று அல்லது இருவரை தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை. அதில் 11 வீரர்கள் கொண்ட அணியையே உருவாக்கலாம். அந்த 11 வீரர்களில் என்னுடைய சொந்த விருப்பு வெறுப்புகள் இருக்கலாம். ஆனால் எப்போதுமே ஒவ்வொரு தலைமுறையும் சிறப்பாக செல்கிறது. எங்களது காலத்தில் சுனில் கவாஸ்கர் மிகச் சிறந்தவராக செயல்பட்டார். அதன் பின் ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக் ஆகியோர் அசத்தலாக செயல்பட்டனர்”

Kapil-dev-2

“இந்த தலைமுறையில் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் உள்ளனர். அடுத்த தலைமுறையில் இன்னும் சிறந்த வீரர்கள் வருவார்கள். இன்னும் சொல்லப்போனால் அடுத்து வரும் தலைமுறையில் அவர்களை விட சிறந்த வீரர்கள் வந்து இன்னும் சிறப்பாக செயல்படுவார்கள்” என்று கூறினார். அவர் கூறுவது போல முதலில் சுனில் கவாஸ்கர் உலகிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் 10000 ரன்களை அடித்த முதல் வீரராக சாதனை படைத்தார். அவருக்கு பின் வந்த சச்சின் டெண்டுல்கர் அவரையும் மிஞ்சி ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தலா 10,000 ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்தார்.

இதையும் படிங்க: சச்சின், விராட் கோலி ஓரமா தான் நிக்கணும், ஒருநாள் கிரிக்கெட்டின் ஆல் டைம் லெஜெண்ட் அவர் தான் – சஞ்சய் மஞ்ரேக்கர்

தற்போதுள்ள விராட் கோலி அந்த 10000 ரன்களை அதிவேகமாக அடித்த வீரராக சாதனை படைத்து வருகிறார். அடுத்த தலைமுறையில் சுப்மன் கில் போன்ற வீரர்கள் விராட் கோலியை மிஞ்சி சாதனைகள் படைக்கலாம். இதைத்தான் இந்த விவாதத்துக்கு பதிலாக கபில் தேவ் தெரிவிக்கிறார். அதாவது ஒவ்வொரு தலைமுறைக்கும் முன்பை விட சிறந்த வீரர்கள் வந்து கொண்டே இருப்பார்கள் என்பதால் யாரையும் யாருடனும் ஒப்பிடுவது தேவையற்ற வேலை என்றே கூறலாம்.

Advertisement