
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் சர்வதேச டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு அறிமுகமான அவர் 3 விதமான கிரிக்கெட்டிலும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி நியூசிலாந்து அணியில் நிரந்தர இடத்தைப் பிடித்தார். நாளடைவில் கேப்டனாகவும் நியமிக்கப்பட்ட அவரது தலைமையில் நியூசிலாந்து நிறைய வெற்றிகளை பெற்று அசத்தியது.
அவருடைய தலைமையில் நியூசிலாந்து 75 போட்டிகளில் 39 வெற்றிகள் 34 தோல்விகளை சந்தித்தது. குறிப்பாக வில்லியம்சன் தலைமையில் 2016, 2022 ஆகிய அடுத்தடுத்த டி20 உலகக் கோப்பைகளில் நியூசிலாந்து செமி ஃபைனல் வரை சென்று அசத்தியது. 2021 டி20 உலகக் கோப்பையில் அவரது தலைமையில் நியூசிலாந்து இறுதிப்போட்டி வரை சென்று அசத்தியது.
அதே போல ஒரு பேட்ஸ்மேனாக 2575 ரன்களை 33.44 என்ற நல்ல சராசரியில் குவித்துள்ள வில்லியம்சன் 18 அரை சதங்கள் அடித்து நியூசிலாந்தின் வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2வது அதிக ரன்கள் குவித்த நியூசிலாந்து வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். அப்படிப்பட்ட அவர் சமீப காலங்களில் காயத்தால் தடுமாறி வந்தார்.
அதன் காரணமாக 35 வயதில் சர்வதேச டி20 போட்டிகளில் மட்டும் ஓய்வு பெறுவதாக வில்லியம்சன் அறிவித்துள்ளார். குறிப்பாக 2026 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் நியூஸிலாந்து இளம் வீரர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெறுவதாக வில்லியம்சன் தெரிவித்துள்ளார். அதே சமயம் நியூசிலாந்துக்காக தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியது பின்வருமாறு.
“அது நான் நீண்ட காலமாக ஒரு அங்கமாக இருக்க விரும்பிய ஒன்றாகும். டி20 கிரிக்கெட்டில் கிடைத்த அனுபவம் மற்றும் நினைவுகளுக்காக நன்றியுடையவனாக இருக்கிறேன். அதிலிருந்து விடை பெறுவதற்கு எனக்கும் என்னுடைய அணிக்கும் இதுவே சரியான நேரம். இந்த முடிவு எங்களுடைய அணிக்கு அடுத்த 2026 டி20 உலகக் கோப்பைக்கு தேவையான கவனத்தை செலுத்துவதற்கு தேவையான தெளிவான தெளிவைக் கொடுக்கும்”
இதையும் படிங்க: ஃபைனலில் இதை செஞ்சாலே போதும்.. இந்திய ரசிகர்களை சைல்ன்ட் பண்ணிடுவோம்.. தெ.ஆ கேப்டன் லாரா பேட்டி
“நியூசிலாந்தில் டி20 கிரிக்கெட்டில் நிறைய திறமை இருக்கிறது. எனவே அவர்களை உலகக் கோப்பைக்கு தயாராகுவது மிகவும் முக்கியம்” என்று தெரிவித்தார். அந்த வகையில் அணியின் நன்மைக்காக விடை பெற்றுள்ள அவருக்கு நியூசிலாந்து மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.