ஐசிசி 2025 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி நவம்பர் 2ஆம் தேதி நவி மும்பையில் நடைபெறுகிறது. மதியம் 3.00 மணிக்கு துவங்கும் அந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை இந்தியா தங்களது சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. வரலாற்றில் இதுவரை தென்னாபிரிக்கா மற்றும் இந்தியா அணிகள் ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை வென்றதில்லை.
எனவே இம்முறை முதல் முறையாக கோப்பையை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. குறிப்பாக 2011 உலகக் கோப்பையை தோனி தலைமையில் இந்தியா வென்று சாதனை படைத்தது. அதே போல ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்திய மகளிரணி சொந்த மண்ணில் கோப்பையை வெல்ல வேண்டும் என்பது இங்குள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது.
இந்திய ரசிகர்களை சைலன்ட் செய்வோம்:
இந்நிலையில் இறுதிப்போட்டியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் தங்களுக்கு எதிராகவும் இந்திய அணிக்கு ஆதரவாகவும் இருப்பார்கள் என்று தென்னாபிரிக்க கேப்டன் லாரா வோல்வர்ட் தெரிவித்துள்ளார். அங்கே நல்ல கிரிக்கெட்டை விளையாடி இந்தியாவை தோற்கடித்தால் இந்திய ரசிகர்களின் ஆரவாரம் அமைதியாகி விடும் என்றும் அவர் கூறியுள்ளார். அதை செய்ய தென்னாப்பிரிக்கா தயாராக இருப்பது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“லீக் கிரிக்கெட்டை விட நாக் அவுட் போட்டிகள் முற்றிலும் வித்தியாசமானது. நாக் அவுட் போட்டிகளில் கடந்தப் போட்டியில் ஜெமிமா அசத்தியதைப் போல வீராங்கனைகள் ஏதேனும் ஸ்பெஷல் விஷயங்களை செய்வதை நாம் பார்க்கிறோம். இந்தியாவுக்கு எதிராக தோல்வியை சந்தித்த லீக் போட்டியை பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை. வெற்றிக்கு நல்ல கிரிக்கெட்டை விளையாட வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியும்”
தென்னாப்பிரிக்கா கேப்டன் நம்பிக்கை:
“ஏனெனில் வலுவான அணியான இந்தியா உயர்ந்த தன்னம்பிக்கையுடன் இருப்பார்கள். மொத்த ரசிகர்கள் கூட்டமும் இந்தியாவுக்கு பின் நிற்கும் என்பதால் இப்போட்டி எங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். மைதானம் முழுவதும் அவர்களுக்கு ஆதரவு இருக்கலாம். அப்படிப்பட்ட ரசிகர்களுக்கு மத்தியில் விளையாடுவது உற்சாகமாக இருக்கும். அதே சமயம் அந்த அதிகப்படியான ஆதரவு வென்றாக வேண்டும் என்ற அழுத்தத்தை இந்தியா மீது போடும்”
இதையும் படிங்க: கோப்பையை வீட்டுக்கு கொண்டு வாங்க.. இந்திய மகளிரணிக்கு ஆடவர் அணியினர் ஆலோசனையுடன் வாழ்த்து மழை
“(உள்நாட்டு ரசிகர்களை அமைதிப்படுத்துவதற்கு திட்டம் வைத்திருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு) நாங்கள் வெல்வோம் என்று நம்புகிறேன். அது இந்திய ரசிகர்களை அமைதியாக்கும்” என்று கூறினார். முன்னதாக 2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன் இந்தியாவை தோற்கடித்து இந்திய ரசிகர்களை சைலன்ட் செய்வோம் என்று ஆஸ்திரேலியா கேப்டன் பட் கமின்ஸ் தெரிவித்திருந்தார். கடைசியில் இந்தியாவை தோற்கடித்த அவர் அதை செய்தும் காட்டினார். அதே தொனியில் லாராவும் இந்திய ரசிகர்களை அமைதியாக்குவோம் என்று தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.



