ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பையின் மாபெரும் இறுதிப்போட்டி நவம்பர் 2ஆம் தேதி நவி மும்பையில் நடைபெறுகிறது. மதியம் 3.00 மணிக்கு துவங்கும் அப்போட்டியில் தென்னாபிரிக்க அணியை இந்தியா தங்களது சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. வரலாற்றில் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா அணிகள் ஒருமுறை கூட மகளிர் உலகக் கோப்பையை வென்றதில்லை.
எனவே இம்முறை முதல் முறையாக உலகக் கோப்பையை வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. குறிப்பாக 2011 உலகக் கோப்பையை தோனி தலைமையில் சொந்த மண்ணில் இந்தியா 28 வருடங்கள் கழித்து வென்று சாதனை படைத்தது. அதே போல ஹர்மன்ப்ரீத் கௌர் தலைமையிலான இந்திய மகளிரணி சொந்த மண்ணில் சாம்பியன் பட்டத்தை வென்று சரித்திரம் படைக்கும் என்று கோடிக்கணக்கான எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்திய சிங்கப்பெண்களுக்கு:
இந்நிலையில் இந்திய மகளிரணிக்கு ஆடவர் கிரிக்கெட் அணியினர் அனைவரும் வாழ்த்து தெரிவித்துள்ளார்கள். தற்போது ஆஸ்திரேலியாவில் டி20 தொடரில் விளையாடி வரும் அவர்களில் பயிற்சியாளர் கம்பீர் தெரிவித்த வாழ்த்து மற்றும் ஆலோசனை பின்வருமாறு. “இந்திய அணி மற்றும் பயிற்சியாளர் குழு சார்பாக மகளிர் அணிக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன். இந்த தருணத்தில் பயமின்றி விளையாடுங்கள்”
“தவறு செய்ய பயப்படாதீர்கள். ஏனெனில் ஏற்கனவே நீங்கள் மொத்த நாட்டையும் பெருமைப்பட வைத்துள்ளீர்கள்” என்று கூறினார். இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ். “உலகக்கோப்பை இறுதிபோட்டிக்காக மகளிரணிக்கு வாழ்த்துக்கள். அந்த சந்தர்ப்பத்தை மகிழ்ச்சியாக எதிர்கொள்ளுங்கள். இதுவரை நீங்கள் அற்புதமாக பயணித்துள்ளீர்கள் என்று நான் நினைக்கிறேன்” எனக் கூறினார்.
ஆடவர் அணியினர் வாழ்த்து மழை:
ஆல் ரவுண்டர் அக்சர் பட்டேல். “உங்களை நீங்களாகவே சிந்தித்து இதுவரை செய்ததை தொடருங்கள். அனைத்துக்கும் வாழ்த்துக்கள்” என்று வாழ்த்தினார். நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா. “உலகக்கோப்பை இறுதிப்போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு அனைத்து நேரமும் கிடைக்காது என்பதால் மகிழ்ச்சியுடன் விளையாடுங்கள். நன்றாக விளையாடும் நீங்கள் வித்தியாசமாக இருக்க வேண்டிய அவசியமில்லை”
இதையும் படிங்க: 32/3 டூ 119/4.. கம்பேக் கொடுத்த ரிஷப் பண்ட்.. தெ.ஆ அணியை மடக்கிய இந்தியா ஏ.. போராடி வெல்லுமா?
“உங்களுக்கு ஆதரவளித்து நிகழ்காலத்தில் சிறந்த ஆட்டத்தை கொடுங்கள். மற்றவை உங்களை கவனித்துக் கொள்ளும்” என்று கூறினார் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி. “இதுவரை நீங்கள் சாதித்ததற்காக பெருமையடைகிறேன். இறுதிப்போட்டியிலும் அசத்தி கோப்பையை வீட்டுக்கு கொண்டு வருவீர்கள் என்று நம்புகிறேன்” என வாழ்த்தினார். அத்துடன் மற்றொரு தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, அர்ஷ்தீப் சிங், சஞ்சு சாம்சன், சிவம் துபே, ரிலாக் வர்மா, நிதிஷ் ரெட்டி, குல்தீப் யாதவ் உட்பட அனைத்து இந்திய வீரர்களும் மகளிரணிக்கு வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.



