
நியூசிலாந்துக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இங்கிலாந்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. அந்த நிலையில் 3வது போட்டி டிசம்பர் 14ஆம் தேதி ஹமில்டன் நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதை அடுத்த களம் இறங்கிய நியூசிலாந்து சிறப்பாக விளையாடி 347 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 44, கேப்டன் டாம் லாதம் 63, மிட்சேல் சான்ட்னர் 76 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக மேத்தியூ போட்ஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்தை அபாரமாக பந்து வீசிய நியூசிலாந்து வெறும் 143 ரன்களுக்கு சுருட்டி மிரட்டியது.
அதிகபட்சமாக ஜோ ரூட் 32 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக மாட் ஹென்றி 4, வில்லியம் ஓ’ரோர்கே 3, மிட்சேல் சான்ட்னர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். பின்னர் 204 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய நியூசிலாந்து அபாரமாக விளையாடி 453 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் கேன் வில்லியம்சன் சதமடித்து 156 ரன்கள் குவித்தார்.
டேரில் மிட்சேல் 60, டாம் ப்ளண்டல 44*, ரச்சின் ரவீந்திரா 44, மிட்சேல் சான்ட்னர் 49 ரன்கள் குவித்து அசத்தினார்கள். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜேக்கப் பேத்தல் 3 விக்கெட்டுகளை எடுத்தார். இறுதியில் 658 என்ற மெகா இலக்கை துரத்தும் இங்கிலாந்து மூன்றாவது நாள் முடிவில் 18-2 என தடுமாறி வருகிறது. ஜாக் கிராவ்லி 5, பேன் டக்கெட் 4 ரன்களில் அவுட்டான நிலையில் களத்தில் ஜேக்கப் பேத்தல் 9*, ரூட் 0* ரன்களுடன் உள்ளனர்.
தற்சமயத்தில் இங்கிலாந்துக்கு இன்னும் 640 ரன்கள் தேவைப்படுவதால் இப்போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெறுவதற்கே அதிக வாய்ப்புள்ளது. முன்னதாக இப்போட்டி நடைபெறும் ஹமில்டன் மைதானத்தில் கேன் வில்லியம்சன் 2019ஆம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக 200, இங்கிலாந்துக்கு எதிராக 104 ரன்கள் அடித்தார். மேலும் 2020ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அவர் 251 ரன்கள் குவித்தார்.
இதையும் படிங்க: இந்தியா இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தோக்க கூடாதுனா இதுநடந்தா மட்டும் தான் முடியும் – விவரம் இதோ
அப்படியே 2024ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 133 ரன்கள் அடித்த வில்லியம்சன் தற்போது 156 ரன்கள் குவித்துள்ளார். அந்த வகையில் ஹமில்டன் மைதானத்தில் அவர் மொத்தம் 5 டெஸ்ட் சதங்கள் அடித்துள்ளார். இதன் வாயிலாக 147 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் 5 சதங்கள் அடித்த முதல் பேட்ஸ்மேன் என்ற தனித்தவ உலக சாதனையை வில்லியம்சன் படைத்துள்ளார். அவரைத் தவிர்த்து வேறு யாரும் ஒரே மைதானத்தில் 5 டெஸ்ட் சதங்கள் அடித்ததில்லை.