அண்டர்-19 முதல் 100 வரை.. தனித்துவமான உலக சாதனை படைத்த வில்லியம்சன் – சௌதீ.. சவால் விடும் ஆஸி

- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் இத்தொடரின் 2வது போட்டி மார்ச் 8ஆம் தேதி இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு கிறிஸ்ட்சர்ச் நகரில் துவங்கியது. அதில் நியூசிலாந்து கேப்டன் டிம் சௌதீ மற்றும் நம்பிக்கை நட்சத்திரம் கேன் வில்லியம்சன் ஆகியோர் தங்களுடைய 100வது போட்டியில் ஜோடியாக விளையாடினர்.

சிறுவயதிலிருந்தே ஒன்றாக விளையாடத் துவங்கிய இவர்கள் கடந்த 2008ஆம் ஆண்டு மலேசியாவில் நடைபெற்ற அண்டர்-19 உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்காக ஒரே அணியில் விளையாடினர். இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் டிம் சௌதீ 2008, கேன் வில்லியம்சன் 2010 என வெவ்வேறு வருடங்களில் நியூசிலாந்துக்காக அறிமுகமானார்கள்.

- Advertisement -

தனித்துவ சாதனை:
ஆனால் சில வருடங்களில் ஒன்றாக சேர்ந்து விளையாடத் துவங்கிய இவர்கள் குறுகிய காலத்திலேயே நியூசிலாந்தின் முக்கிய வீரர்களாக உருவெடுத்தனர். அதைத் தொடர்ந்து கடந்த 2016ஆம் ஆண்டு புலவாயோ நகரில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக கேன் வில்லியம்சன் மற்றும் டிம் சௌதீ ஆகிய இருவருமே தங்களுடைய 50வது போட்டியை ஒன்றாக சேர்ந்து விளையாடினார்கள்.

அப்படியே காலங்கள் உருண்டோடிய நிலையில் இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அந்த இருவரும் தங்களின் 100வது போட்டியில் ஒன்றாக விளையாடியுள்ளனர். இதன் வாயிலாக 147 வரலாறு கொண்ட டெஸ்ட் கிரிக்கெட்டில் 50வது போட்டியையும் 100வது போட்டியையும் ஒன்றாக சேர்ந்து விளையாடிய வீரர்கள் என்ற தனித்துவமான சாதனையை கேன் வில்லியம்சன் மற்றும் டிம் சௌதீ ஆகியோர் படைத்துள்ளது ரசிகர்களுக்கு வியப்பை கொடுத்துள்ளது.

- Advertisement -

அதனால் தங்களுடைய குடும்பத்தின் முன்னிலையில் நியூசிலாந்து வாரியம் கொடுத்த கௌரவத்துடன் இரு அணி வீரர்கள் மற்றும் ரசிகர்களின் பாராட்டுக்கு மத்தியில் அவர்கள் களமிறங்கினர். அதைத் தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசிய ஆஸ்திரேலியா ஆரம்பம் முதலே அனலாக செயல்பட்டு நியூசிலாந்தை வெறும் 162 ரன்களுக்கு சுருட்டியது. நியூசிலாந்துக்கு கேன் வில்லியம்சன் போன்ற முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில் அதிகபட்சமாக டாம் லாதம் 38, மாட் ஹென்றி 29 ரன்கள் எடுத்தனர்.

இதையும் படிங்க: தனது 100 ஆவது டெஸ்ட் போட்டியின் மூலம் மேலும் ஒரு விசித்திரமான சாதனைக்கு சொந்தக்காரரான – தமிழக வீரர் அஷ்வின்

ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 5, மிட்சேல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகளை எடுத்தனர். அதன் பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் நாள் முடிவில் 124/4 ரன்கள் எடுத்து சவால் கொடுத்து 38 ரன்கள் பின்தங்கிய நிலையில் போராடி வருகிறது. அந்த அணிக்கு ஸ்டீவ் ஸ்மித் 11, உஸ்மான் கவாஜா 16, கேமரூன் கிரீன் 25, டிராவிஸ் ஹெட் 21 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் களத்தில் மார்னஸ் லபுஸ்ஷேன் 45*, நேதன் லயன் 1* ரன்களுடன் உள்ளனர்.

Advertisement