
இலங்கைக்கு எதிராக இந்தியா விளையாடிய முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்தது. ஆகஸ்ட் இரண்டாம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இலங்கை 50 ஓவரில் 230/8 ரன்கள் எடுத்தது. அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா 58 ரன்கள் அடித்து நல்ல துவக்கத்தை கொடுத்தார்.
இருப்பினும் எதிர்ப்புறம் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல் உள்ளிட்ட மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறினர். அதே போல கடைசியில் போராடிய சிவம் துபேவும் ஃபினிஷிங் செய்யாமல் ஏமாற்றத்தை கொடுத்தார். அப்போது கடைசி விக்கெட்டுக்கு இந்தியா வெற்றி பெற 14 பந்துகளில் வெறும் 1 ரன் மட்டுமே தேவைப்பட்டது.
அர்ஷ்தீப் தம்பியின் சொதப்பல்:
ஆனால் அப்போது களமிறங்கிய அர்ஷ்தீப் சிங் சிங்கிள் எடுக்க முயற்சிக்காமல் தோனி போல சிக்சர் அடிக்க முயற்சித்து டக் அவுட்டாகி வெற்றியைத் தாரை வார்த்தார். அதனால் ஏராளமான இந்திய ரசிகர்கள் சமூகவலைதளங்களில் அவர் மீது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அப்போட்டியில் 14 பந்துகளில் 1 ரன் தேவைப்பட்ட போது ஒன்று அர்ஷ்தீப் சிங் மெதுவாக விளையாடியிருக்கலாம்.
அல்லது அடுத்த ஓவரில் 5* ரன்களுடன் எதிர்ப்புறம் செட்டிலாயிருந்த சிராஜ்க்கு ஸ்ட்ரைக்கை கொடுத்திருக்கலாம் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அர்ஷ்தீப் சிங் 13 – 14 பந்துகள் இருந்த போது செய்த வேலையை நீங்கள் பாருங்கள். ஒருவேளை 1 பந்து மட்டுமே மீதமிருக்கிறது என்றால் நீங்கள் அப்படி அதிரடியாக விளையாட முயற்சித்திருக்கலாம்”
“குல்தீப் உங்களுக்கு முன்பாகத்தான் விளையாடினார். சிராஜ் பந்தை தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தார். எனவே நீங்களும் பந்தை நிறுத்தியிருக்க வேண்டும். அதைச் செய்திருந்தால் சிராஜ் போட்டியை முடித்திருப்பார். அல்லது நீங்களே அடுத்த ஓவரில் கூட முடித்திருக்கலாம். அப்படி விளையாடியிருந்தால் அந்த ஒரு ரன் தாமாக வந்திருக்கும். ஆனால் ஆஃப் ஸ்பின்னரை எதிர்கொள்ளும் நீங்கள் முட்டி போட்டு அடித்தால் அவுட் மட்டுமே ஆவீர்கள்”
இதையும் படிங்க: முதல் ஒன்டேவில் அம்பலமான அம்பயர்களின் மெகா தவறு.. ஐசிசி 16.3.1.1 விதிமுறை ஆதரத்துடன் ரசிகர்கள் கோபம்
“அர்ஷ்தீப் தம்பி இந்த வேலையை நீங்கள் செய்வீர்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை. பரவாயில்லை உண்மையில் அப்போட்டி இவ்வளவு தூரத்திற்கு வந்திருக்கக் கூடாது. ஆனால் அடுத்த முறை இது போன்ற சூழ்நிலை வந்தால் இப்படி செய்து விடாதீர்கள்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இரண்டாவது போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி கொழும்பு நகரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.