இந்நேரம் அவர் மட்டும் பாகிஸ்தானில் இருந்திருந்தா நாங்க சேன்ஸ் கொடுத்திருப்போம் – இந்திய வீரர் பற்றி கம்ரான் அக்மல்

Kamran
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ஆரம்பம் முதலே நிறைய இளம் வீரர்கள் தங்களது அபார திறமையால் எதிரணிகளுக்கு சவால் கொடுத்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகின்றனர். அதில் குறிப்பிடத்தக்க அம்சமாக ஹைதராபாத் அணிக்காக விளையாடும் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 22 வயது இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் தனது அசுர வேகப்பந்துகளால் அனைவரின் பாராட்டுகளை பெற்று வருகிறார். கடந்த 2021இல் தமிழக வீரர் நடராஜன் விலகியதால் அவரின் இடத்தில் வாய்ப்பு பெற்ற இவர் 145 கி.மீ வேகமான பந்துகளை அசால்ட்டாக வீசியதால் இவரை போன்ற பவுலர்களுக்கு இந்திய அணியில் நல்ல எதிர்காலம் உள்ளது என்று அப்போதைய இந்திய கேப்டன் விராட் கோலி வெளிப்படையாகப் பாராட்டினார்.

அதன் காரணமாகவே 4 கோடி என்ற மிகப்பெரிய தொகைக்கு ஹைதராபாத் அணி நிர்வாகம் தக்க வைத்த நிலையில் இந்த வருடம் இதுவரை பங்கேற்ற 11 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் ஓரளவு நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட்டு வருகிறார். மேலும் பஞ்சாப் எதிரான போட்டியில் கடைசி ஓவரில் 1 ரன் கூட கொடுக்காமல் 3 விக்கெட்டுகளை எடுத்த அவர் ஜாம்பவான் மலிங்காவின் சாதனையை சமன் செய்தார்.

- Advertisement -

விமர்சனத்தில் உம்ரான்:
அதைவிட குஜராத்துக்கு எதிரான போட்டியில் தனது அசுர வேகத்தில் 4 க்ளீன் போல்ட் உட்பட 5 விக்கெட்டுகளை எடுத்த அவர் மீண்டும் சாதனை படைத்தார். இப்படி இந்திய மைதானங்களிலேயே சக்கை போடு போடும் இவர் வரும் வேகத்திற்கு கைகொடுக்கும் ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபரில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் கண்டிப்பாக சிறப்பாக செயல்படுவார் என்ற கோணத்தில் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பளிக்க வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் உட்பட பல ஜாம்பவான்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் ஆரம்பம் முதலே வேகத்திற்கு ஈடாக ரன்களையும் கொடுத்து வரும் இவர் டெல்லிக்கு எதிரான போட்டியில் 157 கி.மீ வேகப்பந்தை வீசி ஐபிஎல் வரலாற்றில் அதி வேகமான பந்தை வீசிய இந்திய பவுலர் என்ற சாதனை படைத்தாலும் 4 ஓவரில் 52 ரன்களை வாரி வழங்கினார்.

Umran

இதனால் இப்போதைக்கு வாய்ப்பு வழங்கக்கூடாது என்றும் வேகத்தில் விவேகத்தை புகுத்தி தொடர்ச்சியாக குறைந்த ரன்களைக் கொடுத்து அதிக விக்கெட்டுகளை எடுக்க தொடங்கினால் மட்டுமே அதுபற்றி யோசிக்க வேண்டும் என்று உம்ரான் மாலிக்க்கு எதிராக நிறைய விமர்சனங்களும் எழுந்துள்ளன. இருப்பினும் இந்தியாவில் 150 கி.மீ வேகப்பந்துகளை தொடர்ச்சியாக வீசும் அளவுக்கு எந்த பலருமே இல்லாத காரணத்தால் தேர்வுக்குழு தலைவராக நான் இருந்தால் கண்டிப்பாக அவரை இந்திய அணியில் தேர்வு செய்வேன் என்று ஹர்பஜன் சிங் போன்ற ஒருசில முன்னாள் வீரர்கள் இன்னும் கூட அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

பாகிஸ்தானாக இருந்தால்:
இந்நிலையில் உம்ரான் மாலிக் பாகிஸ்தானில் விளையாடினால் இந்த கேள்விகள் எதுவுமே இல்லாமல் இந்நேரம் நேரடியாக சர்வதேச கிரிக்கெட் விளையாடியிருப்பார் என்று அந்த அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஒருவேளை அவர் (உம்ரான்) பாகிஸ்தானில் இருந்தால் இந்நேரம் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியிருப்பார். அவரின் எக்கனாமி அதிகமாக இருந்தாலும் விக்கெட் எடுக்கக்கூடிய பவுலராக தொடர்ந்து விக்கெட்களை எடுத்து வருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் 155 கி.மீட்டரை தொடும் அவரது வேகம் குறைவது கிடையாது”

Umran Malik

“எனவே இது இந்திய அணியில் நல்ல போட்டியை ஏற்படுத்தும். இதற்கு முன் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாமல் இந்திய கிரிக்கெட் தடுமாறியது. ஆனால் இப்போது பும்ரா, ஷமி, சைனி, சிராஜ் போன்றவர்கள் உள்ளனர். சொல்லப்போனால் உமேஷ் யாதவ் கூட சிறப்பாக செயல்படுகிறார். அந்த வகையில் 10 – 12 நல்ல வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் இந்திய தேர்வு குழுவினருக்கு சிறந்தவரை தேர்வு செய்வதில் கடினம் ஏற்பட்டுள்ளது” என்று கூறினார்.

- Advertisement -

அக்தர், லீ:
பொதுவாகவே வேகப்பந்து வீச்சாளர்கள் ரன்களை சற்று அதிகமாக கொடுப்பது சாதாரண ஒன்றுதான் எனக் கூறும் கம்ரன் அக்மல் வரலாற்றில் சோயப் அக்தர், பிரட் லீ போன்ற உலகத்தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் கூட சில சமயங்களில் ரன்களை வாரி வழங்கியுள்ளார்கள் என்று தெரிவிக்கிறார். எனவே உம்ரான் மாலிக் போன்றவரை நம்பி வாய்ப்பளித்தால் அவர் தன்னைத்தானே மெருகேற்றி கொண்டு வருங்காலங்களில் சிறப்பாக செயல்பட தொடங்குவார் என்று அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : மருத்துவமனையில் இருந்து புகைப்படத்தை வெளியிட்ட ப்ரித்வி ஷா – டெல்லி அணிக்கு திரும்புவாரா?

இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “கடந்த வருடம் அவர் ஒருசில போட்டிகளில் மட்டுமே விளையாடினார். ஒருவேளை அவர் பாகிஸ்தானில் இருந்தால் நிச்சயம் எங்களுக்காக விளையாடி இருப்பார். ஆனால் இந்திய கிரிக்கெட் இம்முறை முழு ஐபிஎல் தொடரில் அவருக்கு விளையாட வாய்ப்பளித்து முதிர்ச்சியைக் காட்டுகிறது. பிரட் லீ, சோயப் அக்தர் கூட சில சமயங்களில் ரன்களை வழங்குவார்கள். ஆனால் அதற்கு ஈடாக விக்கெட்டுகளையும் எடுப்பார்கள். வேகப்பந்து வீச்சாளர்கள் அவ்வாறு தான் இருப்பார்கள்” என்று பேசினார்.

Advertisement