102, 164 ரன்ஸ்.. மன்கட் செய்யத் தெரியாமல் சொதப்பிய வங்கதேச வீரர்.. சொல்லி அடித்த மெண்டிஸ் புதிய உலக சாதனை

Kamindu Mendis
- Advertisement -

வங்கதேசம் மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் அங்கமாக நடைபெறும் இந்த தொடரின் முதல் போட்டி மார்ச் 22ஆம் தேதி சைலட் நகரில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இலங்கை முதல் இன்னிங்ஸில் போராடி 280 ரன்கள் சேர்த்தது.

குறிப்பாக அந்த அணிக்கு மதுசங்கா 2, கருணரத்னே 17, குசால் மெண்டிஸ் 16, ஏஞ்சலோ மேத்யூஸ் 5, சந்திமால் 9 என முக்கிய பேட்ஸ்மேன்கள் குறைந்த ரன்களில் அவுட்யாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் மிடில் ஆர்டரில் ஜோடி சேர்ந்து அசத்திய கேப்டன் தனஞ்செயா டீ சில்வா சதமடித்து 102 ரன்களும் கமிண்டு மெண்டிஸ் சதமடித்து அதே 102 ரன்களும் எடுத்தனர்.

- Advertisement -

மாபெரும் சாதனை:
வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக நகித் ராணா, கலிட் அகமது தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 188 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக டைஜுல் இஸ்லாம் 47 ரன்கள் எடுக்க இலங்கை சார்பில் அதிகபட்சமாக விஸ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதைத்தொடர்ந்து 92 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இலங்கை தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேசம் போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 418 ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு கருணரத்னே 52 ரன்கள் எடுத்ததை தவிர்த்து மீண்டும் முக்கிய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தை கொடுத்தனர். ஆனால் மீண்டும் மிடில் ஆர்டரில் அசத்திய கேப்டன் டீசல் வா சதமடித்து 108 ரன்களும் கமிண்டு மெண்டிஸ் 164 ரன்களும் குவித்து காப்பாற்றினர்.

- Advertisement -

குறிப்பாக 63வது ஓவரின் 5வது பந்தை வீசிய வங்கதேச வீரர் கலீட் அஹ்மத் விக்கெட் கிடைக்காத விரக்தியில் எதிர்ப்புறமிருந்து மெண்டிஸை மன்கட் முறையில் ரன் அவுட் செய்ய முயற்சித்தார். இருப்பினும் அதற்காக பேட்ஸ்மேன் வெளியேறுவதை பார்த்து நின்று பெய்ல்ஸை நீக்காத அவர் ஓடிக்கொண்டே பந்தை ஸ்டம்ப் மீது எறிந்தார். அதனால் “ஸ்டம்ப் மீது பந்து படாததால் மன்கட் அவுட்டை கூட சரியாக செய்ய தெரியாமல் அவர் பல்ப் வாங்கியதை” ரசிகர்கள் கலாய்த்தனர்.

இதையும் படிங்க: அவங்களுக்கு சப்போர்ட் பண்ணாத வரை உங்களால் ஜெயிக்க முடியாது.. டெல்லி அணியை விளாசிய உத்தப்பா

மறுபுறம் முதல் இன்னிங்ஸில் 7வது இடத்தில் களமிறங்கி 102 ரன்கள் குவித்த கமிண்டு மெண்டிஸ் 2வது இன்னிங்ஸில் 8வது இடத்தில் களமிறங்கி 164 ரன்கள் குவித்தார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு போட்டியின் 2 இன்னிங்ஸிலும் 7 அல்லது அதற்கு கீழ் வரிசையில் களமிறங்கி சதமடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்தார். வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக மெஹதி 4 விக்கெட்டுகள் எடுத்தார். இறுதியில் 511 என்ற மெகா இலக்கை வங்கதேசம் துரத்தி வருகிறது.

Advertisement