
இலங்கை மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கால்லே மைதானத்தில் செப்டம்பர் 26ஆம் தேதி துவங்கியது. 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டியில் வென்று முன்னிலை வகிக்கும் இலங்கை இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கைக்கு நிசாங்கா ஒரு ரன்னில் கேப்டன் சௌதீ வேகத்தில் ஆட்டமிழந்தார்.
இருப்பினும் அடுத்ததாக ஜோடி சேர்ந்த கருணரத்னே மற்றும் தினேஷ் சண்டிமல் ஆகியோர் நிதான ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அந்த வகையில் இரண்டாவது விக்கெட்டுக்கு 122 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்த ஜோடியில் கருணரத்னே 46 ரன்களில் ரன் அவுட்டானார். அடுத்ததாக வந்த ஏஞ்சேலோ மேத்யூஸ் தம்முடைய பங்கிற்கு நிதானமாக விளையாடினார்.
அவருடன் சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த தினேஷ் சண்டிமல் நேரம் செல்ல செல்ல அபாரமாக விளையாடி சதமடித்து 16 பவுண்டரியுடன் 116 ரன்கள் விளாசி அவுட்டானார். அதைத் தொடர்ந்து வந்த கமிண்டு மெண்டிஸ் தம்முடைய பங்கிற்கு நியூசிலாந்து பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு ரன்களை குவித்தார். மறுபுறம் தொடர்ந்து அசத்திய மேத்யூஸ் அரை சதமடித்து இலங்கையை வலுப்படுத்தினார்.
அப்போது நிறைவுக்கு வந்த முதல் நாள் முடிவில் 306-3 ரன்கள் குவித்துள்ள இலங்கை வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது. அந்த அணிக்கு களத்தில் மேத்யூஸ் 78*, கமிண்டு மெண்டிஸ் அரை சதமடித்து 51* ரன்களுடன் உள்ளனர். நியூசிலாந்து அணி இப்போட்டியிலும் தடுமாற்றமாக பந்து வீசி வருகிறது.
முன்னதாக இலங்கை வீரர் கமிண்டு மெண்டிஸ் இந்த போட்டியையும் சேர்த்து இதுவரை மொத்தம் 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் இப்போட்டியையும் சேர்த்து அவர் தொடர்ந்து 8 போட்டிகளிலும் 50க்கும் மேற்பட்ட ரன்களை குவித்துள்ளார். அதாவது தனது முதல் 8 போட்டிகளில் இதுவரை அவர் 4 அரை சதங்கள், 4 சதங்கள் உட்பட தொடர்ந்து 8 போட்டிகளிலும் 50க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஐபிஎல் 2025 : இதெல்லாம் ஒரு வேலையா.. ஆர்சிபி ரசிகரை வெளுத்து வாங்கிய ரிஷப் பண்ட்.. காரணம் என்ன?
இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் 8 போட்டிகளிலும் தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த வீரர் என்ற அபாரமான உலக சாதனையை மெண்டிஸ் படைத்துள்ளார். 147 வருட டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் வேறு யாருமே தனது முதல் 8 போட்டிகளில் தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்ததில்லை. அந்த பட்டியல்:
1. கமிண்டு மெண்டிஸ்: 8*
2. சௌத் ஷாக்கீல்: 7
3. சுனில் கவாஸ்கர்/பெர்ட் சுட்க்ளிப்/சயீத் அஹ்மத்/பசில் பட்சர்: தலா 6