பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அங்கு 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற பாகிஸ்தான் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. 2வது போட்டி அக்டோபர் 20ஆம் தேதி ராவல்பிண்டியில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 333 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் சான் மசூத் 87, சபிக் 57, சௌத் ஷகீல் 66, சல்மான் ஆகா 45 ரன்கள் எடுத்தனர். அதனால் ஒரு கட்டத்தில் 315/5 என்ற வலுவான நிலையிலிருந்த பாகிஸ்தானை 333க்கு சுருட்டிய தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக கேசவ் மகாராஜா 7 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
நொறுக்கிய டெய்ல் எண்டர்கள்:
அடுத்து விளையாடிய தென்னாப்பிரிக்காவுக்கு கேப்டன் ஐடன் மார்க்ரம் 32, ரியன் ரிக்கல்டன் 14 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். இருப்பினும் திரிஷ்டன் ஸ்டப்ஸ் 76, டோனி டீ ஜோர்ஸி 55 ரன்கள் அடித்து தென்னாப்பிரிக்காவுக்கு கை கொடுத்தனர். ஆனாலும் மிடில் ஆர்டரில் தேவால்ட் பிரேவிஸ் 0, கைல் வேரின் 10, சைமன் ஹர்மர் 2, மார்கோ யான்சென் 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தையே கொடுத்தனர்.
அதனால் 235/8 என சரிந்த தென்னாப்பிரிக்கா 300 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது 7வது இடத்தில் சேனுரான் முத்துசாமி நங்கூரமாக விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்த கேசவ் மகாராஜ் மெதுவாக விளையாடி 9வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 30 (53) ரன்களை அடித்து பெவிலியன் திரும்பினார்.
ரபாடா 2வது உலக சாதனை:
மறுபுறம் தொடர்ந்து அசத்திய முத்துசாமி அரை சதத்தை அடித்தார். அவருடன் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ககிஸோ ரபாடா பாகிஸ்தான் பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டார். கணிசமான ரன்களை வேகமாக சேர்க்க வேண்டும் என்று நோக்கத்துடன் அதிரடியைத் துவங்கி அவருக்கு எதிராக பாகிஸ்தான் பவுலர்கள் சுமாராகவே பந்து வீசினர்.
அதைப் பயன்படுத்தி பாகிஸ்தானை அடித்து நொறுக்கிய ரபாடா 38 பந்தில் தனது முதல் அரை சதத்தை அடித்தார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கட்டில் 11வது இடத்தில் களமிறங்கி 2வது வேகமான அரை சதத்தை அடித்த வீரர் என்ற உலக சாதனையை ரபாடா படைத்துள்ளார். இதற்கு முன் 1998ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தென்னாப்பிரிக்காவின் பட் சிம்கோக்ஸ் 40 பந்துகளில் 50 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.
இதையும் படிங்க: இன்னும் 2 சிக்ஸர்கள் தான் தேவை.. யுவ்ராஜ் சிங்கை பின்னுக்கு தள்ளி விராட் கோலி – நிகழ்த்தப்போகும் சாதனை
தொடர்ந்து அட்டகாசமாக விளையாடிய ரபாடா 4 பவுண்டரி 4 சிக்சருடன் 71 (61) ரன்னில் அவுட்டானார். மறுபுறம் முத்துசாமி அவுட்டே ஆகாமல் 89* (155) ரன்கள் குவித்ததால் தென்னாப்பிரிக்கா 404 ரன்களை குவித்து பாகிஸ்தானை விட 71 ரன்கள் முன்னிலைப் பெற்றது. பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக ஆசிப் அப்ரிடி 6 விக்கெட்டுகளை எடுத்தார்.



