
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தோற்ற இந்தியா கௌகாத்தியில் நடைபெறும் 2வது போட்டியிலும் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கடந்த வருடம் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா ஒயிட்வாஸ் தோல்வியைச் சந்தித்தது. அப்படி சொந்த மண்ணிலேயே இந்தியா திணறுவதைப் பார்த்து ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் ஒவ்வொரு போட்டியிலும் கௌதம் கம்பீர் மாற்றங்களை செய்து கொண்டே இருந்தால் இந்திய அணி உருப்படுமா? என்ற வகையில் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். கடந்த மாதம் ஹர்ஷித் ராணா தேர்வை விமர்சித்ததற்கு ஸ்ரீகாந்த் வெட்கப்பட வேண்டும் என்று கம்பீர் பதிலடி கொடுத்திருந்தார். ஆனால் இந்தியாவின் முன்னாள் கேப்டன் மற்றும் தேர்வாளரான தமக்கு கிரிக்கெட்டின் அடிப்படை தெரியும் என்று அவருக்கு ஸ்ரீகாந்த் பதிலடி கொடுத்துள்ளார்.
அதே போல கௌஹாத்தி பிட்ச் ரோட் போல இருந்ததாக இந்திய வீரர் குல்தீப் யாதவ் தெரிவித்தார். ஆனால் அதே பிட்ச்சில் தென்னாப்பிரிக்கா ஸ்பின்னர்கள் விக்கெட்டுகளை எடுத்ததாக ஸ்ரீகாந்த் அதிருப்தி தெரிவித்துள்ளார். அத்துடன் கேப்டன் ரிஷப் பண்ட் பொறுப்பின்றி விக்கெட்டை பரிசளித்தது போல நம்முடைய வீரர்களும் பொறுப்பின்றி விளையாடி இந்தியாவை சொந்த மண்ணில் தலைகுனிய வைப்பதாகவும் ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார்.
இது பற்றி ஸ்ரீகாந்த் பேசியது பின்வருமாறு. “அக்சர் பட்டேல் ஏன் 2வது போட்டியில் விளையாடவில்லை? ஏன் இப்படி அதிகப்படியான வெட்டுதல்களையும் மாற்றங்களையும் செய்கிறீர்கள்? ஒவ்வொரு போட்டியிலும் யாரோ ஒருவர் அறிமுகமாக விளையாடுகிறார். இதை அவர்கள் சோதனைத் தவறுகள் என்று அழைப்பார்கள். கௌதம் கம்பீர் தாம் விரும்பும் எதை வேண்டுமானாலும் சொல்லலாம். அதைப் பற்றி நான் கவலைப்பட போவதில்லை”
“நான் இந்தியாவின் முன்னாள் கேப்டனாகவும் தேர்வுக்குழு தலைவராகவும் இருந்துள்ளதால் எனக்கு என்ன பேசுகிறேன் என்பது தெரியும். கௌகாத்தி பிட்ச் ரோட் போல இருக்கிறது என்று குல்தீப் யாதவ் சொன்னது எனக்கு புரியவில்லை. ஏனெனில் அவர் சொன்ன பிட்ச்சில் அடுத்த நாள் இந்திய பேட்ஸ்மேன்கள் சைமன் ஹார்மர் மற்றும் கேசவ் மகாராஜுக்கு எதிராக எட்ஜ் கொடுத்தார்கள். ரோட் என்ற சொல்லப்பட்ட பிட்ச்சில் மார்கோ யான்சென் ஷார்ட் பந்துகளை போட்டு 5 விக்கெட்டுகளை எடுத்தார்”
இதையும் படிங்க: கம்பீர் மாதிரி கோச் எங்களுக்கு வேண்டாம்.. 75% வெற்றியை பாழாக்க விரும்பல.. ஐஸ்லாந்து கிண்டல்
“சைமன் ஹார்மர் காற்றில் பந்தை சுழற்றி அசத்தினார். ஆனால் நமது ஸ்பின்னர்கள் ஃபிளாட்டாக போட்டார்கள். அதே போல ரிஷப் பண்ட் தன்னுடைய இயற்கையான ஆட்டத்தை விளையாடி அவுட்டானார் என்று சொல்வார்கள். ஆனால் கேப்டனாக இருக்கும் அவர் சூழ்நிலையை உணர்ந்து விளையாட வேண்டாமா? தேர்வு கொள்கையும் தவறாக உள்ளது. நீங்கள் சீராக நிலையான தேர்வைப் பின்பற்ற வேண்டும்” என்று கூறினார்.