ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏப்ரல் பதினொன்றாம் தேதி நடைபெற்ற 25வது போட்டியில் கொல்கத்தாவிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய சென்னை மோசமாக பேட்டிங் செய்து 103/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்ததாக விளையாடிய கொல்கத்தா அதே பிட்ச்சில் 10.1 ஓவரிலேயே இலக்கைத் தொட்டு தங்களது 3வது வெற்றியைப் பெற்றது.
அந்தளவுக்கு மோசமாக தோற்ற சென்னை இந்த வருடம் கடைசியாக விளையாடிய 5 போட்டிகளிலும் 5 தோல்விகளை சந்தித்துள்ளது. இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக தொடர்ந்து 5 போட்டிகளில் தோற்று சென்னை மோசமான சாதனை படைத்துள்ளது. மேலும் தங்களுடைய கோட்டையாக கருதப்படும் சேப்பாக்கம் மைதானத்தில் முதல் முறையாக தொடர்ந்து 3 போட்டிகளில் சென்னை தோற்றுள்ளது.
டெஸ்ட் பேட்டிங்:
இது போக ஐபிஎல் தொடரில் பந்துகள் அடிப்படையில் தங்களது மிகப்பெரிய தோல்வியையும் சிஎஸ்கே பதிவு செய்துள்ளது. இத்தனைக்கும் ருதுராஜ் காயத்தை சந்தித்ததால் தோனி மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். அவரது தலைமையில் வெற்றிப் பாதைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்ட சிஎஸ்கே ரசிகர்களுக்கு இந்தப் படுதோல்வி மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் இந்தப் போட்டியில் பவர்பிளேவில் சிஎஸ்கே அணி டெஸ்ட் போட்டிக்கு ஒத்திகை எடுப்பது போல் விளையாடியதாக முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் விமர்சித்துள்ளார். மேலும் ருதுராஜ் இடத்தில் சொதப்பல் ராகுல் திரிபாதியை கொண்டு வராமல் பிரிதிவி ஷா போன்ற இளம் வீரர்களை சென்னை முயற்சித்தால் என்ன? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது பற்றி ஸ்ரீகாந்த் ட்விட்டரில் (எக்ஸ்) பதிவிட்டுள்ளது பின்வருமாறு.
ஸ்ரீகாந்த் விளாசல்:
“இது சிஎஸ்கே அணியின் மிகவும் மோசமான தோல்வியாகும். டெஸ்ட் போட்டிக்கு ஒத்திகை (ரிஹர்செல்) எடுப்பது போல பவர் பிளே பேட்டிங் இருந்தது. ஒட்டு மொத்த பிளேயிங் லெவனும் ஏதோ ஏக்கத்திற்காக ஓடுவது போல் இருக்கிறது. இது ஏதேனும் வித்தியாசமாக சிந்திக்க வேண்டிய நேரமாகும். பிரிதிவி ஷா போன்ற விலைப் போகாத வீரர்களை ஏன் முயற்சிக்கக் கூடாது?”
இதையும் படிங்க: சிஎஸ்கே’வுக்கு விளையாடிய எங்க 3 பேருக்கும் பிட்ச் தெரியும்.. அதை வெச்சு சென்னையை சாய்ச்சுட்டோம்.. ரஹானே பேட்டி
“நீங்கள் அதை முயற்சி செய்வீர்களா? அல்லது அதை செய்வதற்கும் குழப்பமா?” என்று பதிவிட்டுள்ளார். மொத்தத்தில் அடுத்தடுத்த தோல்விகளால் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் திண்டாடுகிறது. அதனால் இந்த வருடம் குறைந்தபட்சம் புள்ளிப்பட்டியலில் 10வது இடத்தைப் பிடிக்காமல் இருக்க வேண்டும் என்பதே சிஎஸ்கே ரசிகர்களின் கடைசி விருப்பமாக இருக்கிறது.



