ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அதில் ஸ்ரேயாஸ் ஐயர் கழற்றி விடப்பட்டு சுப்மன் கில் துணை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டது பலரையும் விமர்சிக்க வைத்துள்ளது. ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 150 – 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடத் தடுமாறும் சுப்மன் கில்லை பிசிசிஐ வருங்கால கேப்டனாக வளர்க்க விரும்புகிறது.
அதனால் சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் கேப்டனாக 754 ரன்கள் அடித்த அவரை தேர்வுக்குழுவினர் துணைக் கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளார்கள். மறுபுறம் 2024 ஐபிஎல், சயீத் முஸ்தாக் அலி டி20 கோப்பைகளை கேப்டனாக வென்ற ஸ்ரேயாஸ் ஐயர் 2025 சீசனில் பஞ்சாப்பை 11 வருடங்கள் கழித்து ஃபைனல் அழைத்து சென்றார். மேலும் பேட்டிங்கில் 604 ரன்களை 175 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசிய அவர் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் அதிக ரன்கள் அடித்து இந்தியா கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்.
முட்டாள்தனமான லாஜிக்:
அப்படிப்பட்ட அவருக்கு ஆசிய கோப்பையில் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட இடம் கிடைக்கவில்லை. அது பற்றி கேட்டதற்கு யாருக்கு பதிலாக ஸ்ரேயாஸ் ஐயரை எடுக்கலாம்? என்று நீங்களே சொல்லுங்கள் என தேர்வுக்குழு தலைவர் அஜித் தெரிவித்தார். 15 பேரை மட்டுமே எடுக்க முடியும் என்பதால் ஸ்ரேயாஸை கழற்றி விட்டது எங்களுடைய தவறல்ல என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் அஜித் அகர்கர் தெரிவித்த கருத்து முட்டாள்தனமானது என்று முன்னாள் இந்திய தேர்வுக்குழு தலைவர் மற்றும் கேப்டன் ஸ்ரீகாந்த் சாடியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தற்சமயத்தில் இருக்கும் ஃபார்முக்கு ஸ்ரேயாஸ் தாமாக தேர்வு செய்யப்பட வேண்டியவர் (ஆட்டோமேட்டிக் சாய்ஸ்). நீங்கள் சமீபத்திய போட்டிகளைப் பார்க்க வேண்டும். ஓரிரு வருடங்களுக்கு முன் அசத்திய வீரர்களை மதிப்பிடுவதில் எந்த அர்த்தமும் இல்லை”
ஸ்ரீகாந்த் பதில் கேள்வி:
“கடந்த ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் 600+ ரன்களை 175 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்தார். இங்கே ஸ்டிரைக் ரேட் தான் மிகவும் முக்கியம். அந்த ஸ்ட்ரைக் ரேட்டில் அசத்தியவரை நீங்கள் கழற்றி விட்டுள்ளீர்கள். நீங்கள் தற்போது அவரை குழப்பமடைய வைத்துள்ளீர்கள். நன்றாக செயல்பட்ட வீரரிடம் “யாருக்கு பதிலாக உங்களைத் தேர்ந்தெடுப்பது?” என்று நீங்கள் சொல்கிறீர்கள். இந்தக் கருத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை”
இதையும் படிங்க: ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து விலகும் ரோஹித்.. ஷ்ரேயாஸ் ஐயருக்கு – அடிக்கவுள்ள ஜாக்பாட்
“இது அகர்கரிடமிருந்து முற்றிலும் முட்டாள்தனமான கருத்து. அதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். நீங்கள் சிவம் துபே, ரிங்கு சிங், சஞ்சு சாம்சனுக்கு இடவசதி அளித்துள்ளீர்கள். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஏன் இடமில்லை? உங்களுடைய கருத்தின் பின்னணியில் இருக்கும் லாஜிக்கை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. அதில் லாஜிக்கே இல்லை” என்று கூறினார்.



