ஆசிய கோப்பை 2025 டி20 கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி ஐக்கிய அரபு நாடுகளில் துவங்குகிறது. அந்தத் தொடரில் விளையாடுவதற்கான இந்தியா அணி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. கேப்டன் சூரியகுமார் யாதவ் தலைமையிலான அந்த அணியில் நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட உள்ளது. அதே போல சுப்மன் கில், சிராஜ் போன்ற வீரர்கள் டி20 கிரிக்கெட்டில் கம்பேக் கொடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பும் காணப்படுகிறது.
இந்நிலையில் ஆசிய கோப்பையில் 14 வயதாகும் இளம் வீரர் வைபவ் சூரியவன்சி விளையாட வேண்டும் என்று முன்னாள் கேப்டன் மற்றும் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். கடந்த ஐபிஎல் தொடரில் அறிமுகமான அவர் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்தார். குஜராத்துக்கு எதிரான போட்டியில் 35 பந்துகளில் சதத்தை அடித்த அவர் உலக சாதனையும் படைத்தார்.
காத்திருக்க வேண்டாம்:
அதற்கடுத்ததாக இங்கிலாந்தில் நடைபெற்ற அண்டர்-19 ஒருநாள் தொடரில் இந்தியாவுக்காக 355 ரன்கள் குவித்த சூரியவன்சி சில விக்கெட்டுகளையும் எடுத்தார். எனவே நல்ல ஃபார்மில் இருக்கும் அவரை தாமதிக்காமல் இந்தியாவுக்காக பயன்படுத்த வேண்டும் என்று ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். குறிப்பாக சஞ்சு சாம்சனுக்கு பதிலாக சூர்யவன்சியை தேர்ந்தெடுக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் தைரியமாக விளையாட வேண்டும். வைபவை காத்திருக்க வைக்காதீர்கள். வைபவ் முதிர்ச்சியடையட்டும் என்று சொல்லாதீர்கள். ஏனெனில் அவர் ஏற்கனவே குறிப்பிடத்தக்க முதிர்ச்சி தன்மையுடன் விளையாடுகிறார். அவருடைய ஷாட் மேக்கிங் வேற லெவலில் இருக்கிறது”
ஸ்ரீகாந்த் தேர்வு:
“ஒருவேளை நான் தேர்வுக்குழு தலைவராக இருந்தால் அவரை 16 பேர் கொண்ட அணியில் தேர்ந்தெடுப்பேன். என்னைப் பொறுத்த வரை சாம்சன் விளையாடுவது சந்தேகமாகும். அபிஷேக் ஷர்மா என்னுடைய முதல் ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. நான் இன்னும் 2 ஓப்பனிங் பேட்ஸ்மேன்களை தேர்ந்தெடுப்பேன்”
இதையும் படிங்க: மரியாதை வேணும்ன்னா விராட் கோலியை பாத்து.. மொத்தமாக இதை செய்ங்க.. பாபர், ரிஸ்வானுக்கு பாக் வீரர் அட்வைஸ்
“அது சூரியவன்சி அல்லது சாய் சுதர்சனாக இருக்கலாம். சுப்மன் கில் பேக்-அப் வீரராக இருப்பார். ஒருவேளை நான் தேர்வாளராக இருந்தால் சூர்யவன்சியை டி20 உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட அணியிலும் எடுப்பேன்” என்று கூறினார். இருப்பினும் சூர்யவன்சிக்கு 15 வயது மட்டுமே நிரம்பியுள்ளதால் இன்னும் சில ஐபிஎல் தொடர்களில் அசத்திய பின்பே வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.



