
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 – 1 (3) என்ற கணக்கில் தோற்றது. அத்தொடருக்கு முன் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்ற ரோஹித் சர்மாவை கழற்றி விட்ட தேர்வுக்குழு சுப்மன் கில்லை புதிய கேப்டனாக நியமித்தது. 2027 உலகக் கோப்பையை கருத்தில் கொண்டு அந்த முடிவெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
அதனால் 2027 உலகக் கோப்பையில் விராட், ரோஹித் விளையாடுவார்களா? என்பது சந்தேகமானது. எனவே உலகக் கோப்பை வாய்ப்பைப் பிடிக்க அவர்கள் பெரிய ரன்கள் குவிக்க வேண்டிய அழுத்தத்திற்குள் தள்ளப்பட்டனர். அந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா தொடரில் கடைசிப் போட்டியில் ரோஹித் 121*, கோலி 74* ரன்கள் அடித்து இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றியை பெற்றுக் கொடுத்தனர்.
அதனால் தங்களை கழற்றி விட நினைக்கும் தேர்வுக் குழுவுக்கும் அவர்கள் தக்க பதிலடி கொடுத்தார்கள். மறுபுறம் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற சுப்மன் கில் தலைமையில் முதல் தொடரிலேயே இந்தியா தோல்வியுற்றது. சொல்லப்போனால் இந்த வருடம் ரோஹித் தலைமையில் தொடர்ச்சியாக 8 ஒருநாள் போட்டிகளில் வென்ற இந்தியா அவருடைய தலைமையில் முதல் போட்டியிலேயே தோற்றது.
மேலும் பேட்ஸ்மேனாக சுப்மன் கில் 10, 9, 24 என பெரிய ரன்கள் எடுக்காமல் தடுமாறினார். இந்நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மாவை காட்டிலும் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டதால் சுப்மன் கில் மிகுந்த அழுத்தத்திற்குள் செயல்பட்டதாக முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். இதற்கிடையே ஜெய்ஸ்வால் போட்டிக்கு காத்திருப்பதால் கில் கூடுதல் அழுத்தத்தை சந்தித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி ஸ்ரீகாந்த் பேசியது பின்வருமாறு. “இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அசத்திய கில் தம்மை அழுத்தத்திற்குள் போட்டுக் கொண்டுள்ளது போல் தெரிகிறது. அதைச் செய்யாமல் அவர் தன்னுடைய ஆட்டத்தை விளையாட வேண்டும். 3வது போட்டியில் அவர் நன்றாக விளையாடியும் ஹேசல்வுட் வீசிய அற்புதமான பந்தில் விக்கெட்டை இழந்தார். ரோஹித் சர்மாவுக்கு பதிலாக கேப்டனாக நியமிக்கப்பட்டதால் அவருடைய பாடி லாங்குவேஜை பாருங்கள்”
இதையும் படிங்க: 141 பந்தில் 200 ரன்ஸ்.. ரஞ்சி டெஸ்ட் போட்டியில் டி20 ஆடிய பிரிதிவி ஷா.. ரவி சாஸ்திரிக்கு பின் அதிரடி சாதனை
“கேப்டனாக நீக்கப்பட்ட ரோஹித்துடன் அவர் ஓப்பனிங்கில் களமிறங்குகிறார். மறுபுறம் ஜெய்ஸ்வால் ஏன் விளையாடவில்லை என்று அனைவரும் கேட்கிறார்கள். இவை அனைத்தும் அவர் மேலே அழுத்தத்தைப் போடுகிறது. இருப்பினும் நல்ல வீரரான அவர் தன்னுடைய சாதாரணமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஏனெனில் அவருடைய ஷாட்டுகள் நன்றாக இருக்கிறது. அழுத்தத்தால் மட்டுமே அவர் விக்கெட்டை இழக்கிறார். தென்னாபிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் தொடரில் சில பெரிய இன்னிங்ஸ் விளையாடும் போது அவர் மீண்டும் தொடர்ச்சியாக அசத்த வாய்ப்புள்ளது” என்று கூறினார்.