ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி கோலாகலமாக துவங்குகிறது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் தங்களுடைய முதல் போட்டியை சொந்த ஊரில் மும்பைக்கு எதிராக விளையாடுகிறது. இம்முறை சென்னை அணிக்காக மீண்டும் தமிழகத்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் 10 வருடங்கள் கழித்து விளையாட உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த அவர் 2009 முதல் 2015 வரை சிஎஸ்கே அணிக்காக தோனி தலைமையில் விளையாடினார். அந்த வாய்ப்பில் 2010, 2011 ஐபிஎல் கோப்பைகளை வெல்ல உதவிய அவர் தோனியின் நம்பிக்கையைப் பெற்றார். அதனால் ஹர்பஜனை கழற்றி விட்ட தோனி இந்திய அணியில் அஸ்வினுக்கு வாய்ப்பு கொடுத்தார். அதைப் பயன்படுத்திய அஸ்வின் இந்தியாவுக்காக 2வது அதிகபட்ச விக்கெட்டுகள் எடுத்து சாதனை படைத்து சமீபத்தில் ஓய்வு பெற்றார்.
அஸ்வின் இஸ் பேக்:
அப்படிப்பட்ட அவர் மீண்டும் சென்னை அணிக்காக விளையாடுவதற்கு ஆவலுடன் காத்திருப்பதாக சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் அதிரடி சரவெடியாக விளையாடுவதற்கு பெயர் போன கிறிஸ் கெயிலை 2011 ஃபைனலில் அஸ்வின் 4 பந்தில் அவுட்டாக்கி சென்னையை வெற்றி பெற வைத்ததாக கிரிஸ் ஸ்ரீகாந்த் பாராட்டியுள்ளார். மேலும் அஸ்வின் எனும் நல்ல ஆல் ரவுண்டரை தோனி தான் கண்டறிந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது பற்றி ஸ்ரீகாந்த் பேசியது பின்வருமாறு. “கிறிஸ் கெயில் யாரை வேண்டுமானாலும் சிக்ஸ் அல்லது பௌண்டரி அடிப்பார். ஆனால் அவரை இறுதிப் போட்டியில் அவுட் செய்வதற்கு அஸ்வினுக்கு வெறும் 4 பந்துகள் மட்டுமே தேவைப்பட்டது. அஸ்வின் கையில் பந்தை எடுத்ததும் கெயில் கால்கள் நடுங்க ஆரம்பித்து விட்டது”
ஸ்ரீகாந்த் பாராட்டு:
“அஸ்வினை ஒரு சிறந்த டி20 பௌலராக கண்டறிந்தது எம்எஸ் தோனி. அதே சமயம் அஸ்வின் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஒருநாள் கிரிக்கெட்டுக்கும் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் தன்னை வளர்த்துக்கொண்டார். அவர் நல்ல பவுலர் மட்டும் கிடையாது. சிறந்த பேட்ஸ்மேனும் கூட” எனக் கூறினார். அவர் கூறுவது போல 2011 ஐபிஎல் தொடரில் கெயில் அற்புதமான ஃபார்மில் இருந்தார்.
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் ட்ராபி வெற்றிக்கு அந்த தோல்வி சமம்.. மோடியை கிண்டலடித்து இந்தியாவை வாழ்த்திய நியூஸி பிரதமர்
ஆனால் சென்னையில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் வெறும் 4 பந்தில் அவரை காலி செய்த அஸ்வின் சிஎஸ்கே கோப்பையை தக்க வைக்க உதவினார். அத்துடன் முரட்டுத்தனமாக அடிக்கக்கூடிய கெய்லை 5 முறை அஸ்வின் அவுட் செய்துள்ளார். ஆனால் அவருக்கு எதிராக கெய்ல் 64 பந்துகளில் வெறும் 53 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. அஸ்வினுக்கு எதிராக 8 வருடங்களில் அவர் வெறும் 3 சிக்ஸர்கள் மட்டுமே அடித்தது குறிப்பிடத்தக்கது.



