ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் இந்திய அணியை தங்களுடைய ஸ்பின்னர்கள் தோற்கடிப்பார்கள் என்று பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மைக் ஹெசன் சமீபத்தில் தெரிவித்திருந்தார். குறிப்பாக சமீபத்திய முத்தரப்பு டி20 தொடரின் ஃபைனலில் ஹாட்ரிக் உட்பட 5 விக்கெட்டுகள் எடுத்த முகமது நவாஸ் பாகிஸ்தான் கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்.
தற்சமயத்தில் உலகின் நம்பர் ஒன் ஸ்பின்னராக திகழும் அவருடன் சுபியன் முஹிம், சாய்ம் ஆயுப், அப்ரார் அஹ்மத் ஆகியோர் சுழலுக்கு சாதகமான துபாயில் இந்தியாவுக்கு சவாலைக் கொடுப்பார்கள் என்று ஹெசன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் டாப் அணிகளுக்கு எதிராக சிறப்பாக செயல்படாத நவாஸை உலகின் சிறந்த ஸ்பின்னர் என்று ஹெசன் சொன்னது வேடிக்கையாக இருப்பதாக முன்னாள் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
ஆர்சிபி போல ஹெசன்:
மேலும் தங்களுடைய முதல் போட்டியில் கத்துக்குட்டி ஓமனை தோற்கடித்த பாகிஸ்தானை இளம் இந்திய அணி வீழ்த்தும் என்றும் ஸ்ரீகாந்த் கணித்துள்ளார். இது பற்றி தம்முடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஹெசன் தைரியமான கருத்துகளை விடுகிறார். அவர் பயிற்சி செய்த எந்த அணிகளும் சிறப்பாக செயல்பட்டதில்லை”
“இதற்கு முன் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட அவர் எதையும் வெல்லவில்லை. அப்படிப்பட்ட நிலையில் அவருடைய தலைமையில் பாகிஸ்தான் எப்படி அசத்தும்? அவர் சில பேட்ஸ்மேன்களிடம் தைரியமாக பந்தின் மேலே பேட்டை எறியுங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஓமனுக்கு எதிராக சாய்ம் ஆயுப் அவுட்டான விதத்தின் பின்னணியில் மைக் ஹெசன் இருப்பார் என்பது எனக்குத் தெரியும்”
அங்கிள்ஸ் அணி:
“அவர் தான் அப்படி பேட்டிங் செய்வார். பாகிஸ்தான் பேட்டிங், பவுலிங் ஆகியவற்றில் சராசரிக்கும் குறைவான அணியாகும். ஷாஹித் அப்ரிடி கூட ஆபத்தாகத் தெரியவில்லை. அவர்கள் 34 – 35 வயதுடைய வீரர்களைக் கொண்ட ஓமனை தங்களது முதல் போட்டியில் வீழ்த்தினார்கள். அங்கிள்கள் நிறைந்த அந்த அணியை பாகிஸ்தான் தோற்கடித்ததில் எதுவுமில்லை”
இதையும் படிங்க: மீண்டும் பெஞ்சில் அமரவைக்கப்படும் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் – அசிஸ்டன்ட் கோச் கொடுத்த ஹின்ட்
“என்னுடைய வயதில் நான் கூட ஓமன் அணியின் கேப்டனாக செயல்படுவேன். எனவே இளம் இந்திய அணிக்கு எதிராக அவர்கள் எப்படி விளையாடுகிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும். ஸ்கொயர் லெக் திசையில் மட்டும் அடிக்கும் பலத்தை கொண்ட முகமது ஹாரிஸ் இந்தியாவின் வருண் சக்கரவர்த்திக்கு எதிராக அடித்தால் கேட்ச்சாக மாறும். பஃகார் ஜாமனை குல்தீப் யாதவ் பார்த்துக் கொள்வார். சுப்மன் கில் போன்ற வீரர்களைக் கொண்ட இந்திய அணியுடன் பாகிஸ்தானில் ஒப்பிட முடியாது” என்று கூறினார்.



