இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர இளம் வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் பாகிஸ்தான் அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் விளையாடுவாரா? மாட்டாரா? என்பதே ரசிகர்கள் பலரது கேள்வியாகவும் இருந்து வருகிறது. ஏனெனில் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது ஆசிய கோப்பை தொடரின் முதலாவது லீக் போட்டியில் ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்த்து மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அர்ஷ்தீப் சிங் பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியிலும் இடம்பெற மாட்டார் :
அதனை தொடர்ந்து செப்டம்பர் 14-ஆம் தேதி துபாய் மைதானத்தில் நடைபெற இருக்கும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாட இருக்கிறது. ஏற்கனவே நடைபெற்ற முடிந்த முதலாவது போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ராவை மட்டுமே முதன்மை வேகப்பந்து வீச்சாளராக வைத்துக்கொண்டு இந்திய அணி விளையாடியிருந்தது.
அவரை தவிர்த்து மூன்று சுழற்பந்து வீச்சாளர்களாக அக்சர் பட்டேல், வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் விளையாடியிருந்தனர். இதன் காரணமாக ஆல்ரவுண்டர்களான ஹார்டிக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே ஆகியோர் பகுதிநேர வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டனர்.
ஆனால் பும்ராவை மட்டுமே முதன்மை வேகப்பந்து வீச்சாளராக வைத்துக் கொண்டு இந்திய அணி டி20 போட்டிகளில் விளையாடக்கூடாது என்றும் இந்திய அணியில் முறையான மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் அவசியம் என்றும் பல்வேறு விமர்சகர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதன் காரணமாக அர்ஷ்தீப் சிங் அடுத்த போட்டியில் விளையாட வேண்டும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் இருந்து வருகிறது.
ஆனால் பாகிஸ்தான் அணிக்கு எதிரான அடுத்த போட்டியிலும் அர்ஷ்தீப் சிங் விளையாட வைக்கப்படாமல் வெளியே அமர வைக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் அதனை உறுதி செய்யும் விதமாக இந்திய அணியின் துணை பயிற்சியாளரான ரயான் டென் டெஸ்கோத்தே தற்போது அளித்துள்ள கருத்து ஒன்று வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க : பாகிஸ்தான் அணியை அச்சுறுத்தும் பவுலராக இந்த இந்திய வீரர் தான் இருப்பார் – விவரம் இதோ
அந்த வகையில் இந்திய துணை பயிற்சியாளர் கூறும் போது : தற்போதைய ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ள அனைவருமே சிறப்பாக செயல்படுகிறார்கள். எனவே நாங்கள் எந்த ஒரு மாற்றத்தையும் தேவையில்லாமல் செய்யப்போவது கிடையாது என்று கூறியுள்ளார். இதனால் பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியிலும் அர்ஷ்தீப் சிங் விளையாடமாட்டார் என்று தெரிகிறது.



