ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 20ஆம் தேதி மும்பையில் 38வது போட்டி நடைபெற்றது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த மும்பை தங்களுடைய 4வது வெற்றியைப் பெற்றது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய சென்னை மீண்டும் தடுமாற்றமாக விளையாடி 177 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயம் செய்தது.
அதிகபட்சமாக ஜடேஜா 53*, துபே 50, ஆயுஸ் மாத்ரே 32 ரன்கள் எடுத்த நிலையில் மும்பைக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 2 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்ததாக விளையாடிய மும்பை மிகவும் அதிரடியாக விளையாடி 15.4 ஓவரிலேயே இலக்கைத் தொட்டு எளிதாக வென்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் ரோகித் சர்மா நீண்ட நாட்கள் கழித்து 76*, சூரியகுமார் 68* ரன்கள் எடுத்து அசத்தினார்கள்.
முடிந்து போன சென்னை:
அதன் காரணமாக தங்களுடைய 6வது தோல்வியை சந்தித்தால் சென்னை புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை வலுவாக பிடித்துள்ளது. தற்போதைய நிலைமையில் சென்னை பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல அடுத்து வரும் 6 போட்டிகளிலும் நன்றாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஆனால் அந்த அணி விளையாடும் விதத்தை வைத்து 6 தொடர்ச்சியான வெற்றிகளைப் பெறுவது அசாத்தியமாக பார்க்கப்படுகிறது.
அதனால் சென்னை அணியின் 2025 ஐபிஎல் கோப்பை கனவு முடிந்து போயுள்ளதாக முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். எனவே குறைந்தபட்சம் எஞ்சியுள்ள போட்டிகளில் ஆவது எதைப்பற்றியும் கவலைப்படாமல் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மறுபுறம் மும்பைக்கு 2025 ஐபிஎல் கோப்பையை வெல்ல பிரகாச வாய்ப்புள்ளதாகவும் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீகாந்த் கணிப்பு:
இது பற்றி அவர் தன்னுடைய ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “சிஎஸ்கே அணிக்கு இந்த சீசன் கிட்டத்தட்ட முடிந்து போய் விட்டது. நன்றாக விளையாடினீர்கள். நன்றாக விளையாடினீர்கள் மும்பை இந்தியன்ஸ். ரோஹித் சர்மா மற்றும் சூரியகுமார் ஆகியோர் பந்தை மைதானத்தின் அனைத்து பகுதிகளிலும் பறக்க விட்டதைப் பார்த்தது விருந்தாக அமைந்தது”
இதையும் படிங்க: ரோஹித் சர்மாவின் பார்ம் பத்தி எந்த கவலையும் வேண்டாம்.. அவரு பார்முக்கு வந்தா இதான் நடக்கும் – பாண்டியா புகழாரம்
“சிஎஸ்கே அணிக்கு மீதமிருக்கும் என்னுடைய ஒரே ஆலோசனை என்னவெனில் எஞ்சியுள்ள போட்டிகளில் அவர்கள் தங்களைத் தாங்களே வெளிப்படுத்தி விளையாட வேண்டும். ஏற்கனவே நான் கணித்தது போல 2025 ஐபிஎல் என்பது மும்பை அணி தோற்க வேண்டிய கோப்பை” என்று கூறியுள்ளார். மொத்தத்தில் ஒரு காலத்தில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிப்பதற்கு பெயர் போன சென்னை தற்போது கடைசி இடத்தை தவிர்க்க போராடுவது சிஎஸ்கே ரசிகர்களை சோகத்தில் மூழ்கடித்துள்ளது.



