
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி கடந்த 15 வருடங்களுக்கு மேலாக சர்வதேச அரங்கில் விளையாடி வருகிறார். அந்த வாய்ப்பில் 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்தும் அவர் இதுவரை 26000க்கும் மேற்பட்ட ரன்களை குவித்து 81 சதங்கள் அடித்துள்ளார். மேலும் 2024 டி20 உலகக் கோப்பை ஃபைனலில் ஆட்டநாயகன் விருது வென்ற அவர் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினர்.
அப்படி இந்தியாவின் நிறைய வெற்றிகளில் பங்காற்றி வரும் தற்சமயத்தில் கொஞ்சம் சுமாராக விளையாடி வருகிறார். அதன் காரணமாக வழக்கம் போல விராட் கோலி விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார். இந்நிலையில் தம்முடைய வாழ்நாளின் கடைசி நேரத்தில் கடைசி டாலரில் விராட் கோலியின் ஆட்டத்தை பார்க்க விரும்புகிறேன் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மற்றும் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் பாராட்டியுள்ளார்.
அதற்கான காரணம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நேற்று விராட் கோலி ஏன் நான் பார்த்த சிறந்த வீரர் என்று சொன்னேன் என நீங்கள் கேட்டீர்கள் மார்க் (வாக்). இப்போட்டியில் அவருடைய செயல்கள் (கோன்ஸ்டஸ் மோதல்) சில புருவங்களை உயர்த்தி இருக்கலாம். ஆனால் விராட் கோலி அப்படிப்பட்டவர் தான். நாம் சச்சின் டெண்டுல்கரை பற்றி பேசுகிறோம். அவர் என்ன ஒரு அற்புதமான வீரர். அவருக்கு எதிராக விளையாடியதை நான் கௌரவமாக கருதுகிறேன்”
“அதே போல ரிக்கி பாண்டிங், பிரைன் லாரா ஆகியோரும் உள்ளனர். ஒருவேளை என்னுடைய கடைசி ரூபாய் அல்லது டாலர் இருந்தால் அதை பிரைன் லாரா விளையாடுவதை பார்க்க நான் செலவழிப்பேன். ஒருவேளை என்னுடைய வாழ்வின் கடைசி நேரத்தில் கடைசி ரூபாய் இருந்தால் அது இரண்டையும் சேர்த்து விராட் கோலி எனக்காக பேட்டிங் செய்வதை பார்க்க விரும்புவேன்”
“இப்படி நான் சொல்வதற்கு காரணங்கள் இருக்கிறது. அது அவருடைய அற்புதமான ஆட்டம் அல்லது கவர் ட்ரைவ் ஆகியவற்றால் அல்ல. மாறாக அவர் பந்தை பார்க்கும் விதம், ரன்கள் எடுக்க ஓடும் விதம், அவருடைய ஃபீல்டிங், அவருடைய லீடர்ஷிப், உச்சகட்ட ஃபிட்னஸ் ஆகியவை தான் அதற்கு காரணம். புள்ளி விவரங்களுடன் நீங்கள் ஒரு போதும் வாதிட முடியாது”
இதையும் படிங்க: 4இல் ஒரு பங்கை கூட தொட முடியாது.. சர்ச்சையில் சிக்கிய தியேட்டர்மேன் விராட் கோலிக்கு பீட்டர்சன் ஆதரவு
“அதனால் தான் அவர் நான் பார்த்த சிறந்த வீரர். நாம் நிறைய சிறந்த வீரர்களை பார்த்துள்ளோம். ஆனால் நான் பார்க்க விரும்பும் ஒரு வீரர் விராட் கோலி என்று நினைக்கிறேன்” எனக் கூறினார். இந்த வகையில் சச்சின் மற்றும் லாராவை விட தம்மை பொறுத்த வரை விராட் கோலி சிறந்த வீரர் என்றும் லாங்கர் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.