ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் கடந்த டிசம்பர் 19ஆம் தேதி துபாயில் நடைபெற்றது. அதில் அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையான வீரர்களை வாங்கிக்கொண்டு 2024 சீசனில் சாம்பியன் பட்டத்தை வெல்வதற்காக தயாராகியுள்ளன. அந்த வரிசையில் 2022இல் புதிதாக துவக்கப்பட்ட லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி தங்களுடைய முதல் கோப்பையை வெல்வதற்கான பயணத்தை துவங்கியுள்ளது.
அதில் கடந்த 2 சீசன்களில் தலைமை பயிற்சியாளராக இருந்த ஜிம்பாப்வே முன்னாள் வீரர் ஆண்டி ஃபிளவருக்கு பதிலாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஜஸ்டின் லாங்கர் 2024 சீசன் முதல் தங்களுடைய பயிற்சியாளராக செயல்படுவார் என்று லக்னோ நிர்வாகம் ஏற்கனவே அறிவித்துள்ளது. குறிப்பாக 2021 டி20 உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வெல்வதற்கு பயிற்சியாளராக முக்கிய பங்காற்றிய காரணத்தால் அவர் இந்த பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார் என்றே சொல்லலாம்.
நிம்மதியா விடமாட்டாங்க:
இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக இருந்த போது நடைபெற்ற டெஸ்ட் தொடரில் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இந்திய வீரர்கள் அவுட்டாகும் வரை தாம் நிம்மதியாக இருந்ததில்லை என ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். குறிப்பாக மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் விளையாடக்கூடிய கேஎல் ராகுல் சுழல் மற்றும் வேகம் ஆகிய 2 வகையான பந்துகளையும் சிறப்பாக எதிர்கொள்ளக்கூடியவர் என அவர் பாராட்டியுள்ளார்.
எனவே ஐபிஎல் தொடரில் முதல் முறையாக பயிற்சியாளராக செயல்பட உள்ள தமக்கு ராகுல் போன்ற வீரர் கேப்டனாக கிடைத்துள்ளது மகிழ்ச்சியை கொடுப்பதாக தெரிவிக்கும் லாங்கர் இது பற்றி லக்னோ நிர்வாகம் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியது பின்வருமாறு. “ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக நான் இருந்த போது இந்தியாவுக்கு எதிராக எங்களுக்கு ஒரு தொடர் இருந்தது”
“அதில் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் அவுட்டாகும் வரை நான் ரிலாக்ஸாக இருக்க மாட்டேன். ஏனெனில் ராகுல் மிகவும் ஆபத்தான வீரர். அதே சமயம் அழகாகவும் நேர்த்தியாகவும் பேட்டிங் செய்யக் கூடியவர். அவரிடம் அனுபவம் இருப்பதால் மைதானத்தின் இரு புறங்களிலும் சிறப்பாக விளையாட முடியும். வேகம் மற்றும் சுழல் ஆகிய 2 வகையான பந்துகளையும் அவர் சிறப்பாக எதிர்கொள்வார்”
இதையும் படிங்க: இதெல்லாம் 10 – 15 வருஷம் கழிச்சு யாரும் நினைக்க மாட்டாங்க.. 2024இல் அந்த சம்பவம் உறுதி.. ராகுல் பேட்டி
“எனவே கேஎல் ராகுல் போன்றவரை கேப்டனாக கொண்டிருப்பதை நான் மகிழ்ச்சியாக கருதுகிறேன்” என்று கூறினார். முன்னதாக கடந்த ஐபிஎல் தொடரில் காயத்தால் வெளியேறி ஃபார்மை இழந்து திண்டாடி வந்த ராகுல் 2023 உலகக் கோப்பையில் அபாரமாக விளையாடி முழுமையான ஃபார்முக்கு திரும்பியுள்ளார். அதனால் 2024 ஐபிஎல் தொடரில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று அனைவரும் எதிர்பார்ப்பது குறிப்பிடத்தக்கது.