WTC Final : இந்தியாவுக்கு சாதகம், ஃபைனலில் கடைசி நேரத்தில் வெளியேறிய முக்கிய பவுலர் – மாற்று வீரரை அறிவித்த ஆஸி வாரியம்

aus
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 2023 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி வரும் ஜூன் 7 முதல் 11 வரை இங்கிலாந்தில் இருக்கும் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. உலக டெஸ்ட் கிரிக்கெட்டின் 2வது சாம்பியனை முடிவு செய்யப் போகும் இந்த மாபெரும் போட்டிக்கு முதல் முறையாக தகுதி பெற்றுள்ள ஆஸ்திரேலியா 2019/, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தங்களை சொந்த மண்ணில் தோற்கடித்து கடைசியாக நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையிலும் வீழ்த்திய இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்து சாம்பியன் பட்டம் வென்று சரித்திரம் படைக்க போராட உள்ளது.

அதே போல கடந்த ஃபைனலில் விராட் கோலி தலைமையில் தோல்வியை சந்தித்த இந்தியா இம்முறை அதிலிருந்து பாடத்தை கற்றுக்கொண்டு ரோஹித் சர்மா தலைமையில் எப்படியாவது கோப்பையை வென்று 2013க்குப்பின் ஐசிசி தொடர்களின் சந்தித்து வரும் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போராட உள்ளது. அந்த வகையில் ஐசிசி தர வரிசையில் டாப் 2 இடங்களில் இருக்கும் இந்த அணிகள் மோதும் மாபெரும் இறுதி போட்டியில் வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் அதிகரித்துள்ளது. அதில் சமீபத்திய பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் பாதியிலேயே வெளியேறிய கேப்டன் பட் கமின்ஸ் இப்போட்டியில் விளையாட உள்ளது ஆஸ்திரேலியாவுக்கு பலத்தை சேர்க்கிறது.

- Advertisement -

வெளியேறிய பவுலர்:
அதனால் முகமது ஷமி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோரை கொண்ட இந்தியாவின் வேகப்பந்து வீச்சு கூட்டணியை விட பட் கமின்ஸ், மிட்சேல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசல்வுட் ஆகியோரை கொண்ட ஆஸ்திரேலியாவின் கூட்டணி மிகவும் தரமானதாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஃபைனல் துவங்குவதற்கு இன்னும் ஓரிரு நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திரம் ஜோஸ் ஹேசல்வுட் காயத்தால் இப்போட்டியிலிருந்து விலகுவதாக ஆஸ்திரேலியா வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நடைபெற்று முடிந்த ஐபிஎல் 2023 தொடரில் பெங்களூரு அணிக்காக விளையாடிய அவர் காயத்தை சந்தித்ததால் பெரும்பாலான போட்டிகளில் விளையாடவில்லை. இருப்பினும் பாதிக்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடாமல் பெஞ்சில் இருந்து குணமடைந்து வந்ததால் இந்த ஃபைனலில் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இறுதியாக சோதிக்கப்பட்டதில் காயம் இன்னும் முழுமையாக குணமடையாத காரணத்தால் ஆஷஸ் தொடருக்கு தயாராகும் வகையில் இந்த ஃபைனலில் இருந்து ஜோஷ் ஹேசல்வுட் வெளியேறுவதாக ஆஸ்திரேலியா அணியின் தேர்வு குழு தலைவர் ஜார்ஜ் பெய்லி அறிவித்துள்ளார்.

- Advertisement -

இதுவரை 59 டெஸ்ட் போட்டிகளில் 222 விக்கெட்டுகளை எடுத்த அனுபவமிக்க தரமான அவர் சமீப காலங்களில் புஜாரா, விராட் கோலி போன்ற இந்திய வீரர்களுக்கு பெரிய சவாலாக இருந்து வருகிறார். அப்படிப்பட்ட அவர் கடைசி நேரத்தில் காயத்தால் வெளியேறியுள்ளது இந்த ஃபைனலில் வேகப்பந்து வீச்சு கூட்டணியில் ஒரு கிளை இல்லாததை போல ஆஸ்திரேலியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இருப்பினும் ஒரு போட்டிக்காக ரிஸ்க் எடுக்க விரும்பாத ஆஸ்திரேலியா வாரியம் பரம எதிரி இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் ஆஷஸ் தொடரில் அவர் களமிறங்குவதற்கு உதவும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளதாக ஜார்ஜ் பெய்லி கூறியுள்ளார். மேலும் அவருக்கு பதிலாக 33 வயதாகும் மற்றொரு வேகப்பந்து வீச்சாளர் மைக்கேல் நீசர் இந்த ஃபைனலுக்கான ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்படுவதாகவும் ஜார்ஜ் பெய்லி அறிவித்துள்ளார்.

இதையும் படிங்க:அவருக்கு பவுலிங் போடுறது சச்சினுக்கு வீசுற மாதிரி இருக்கும் – இளம் இந்திய வீரரை ஓப்பனாக பாராட்டிய வாசிம் அக்ரம்

ஆனாலும் இதுவரை 2 டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடியுள்ள அவருக்கு பதிலாக 7 போட்டிகளில் விளையாடி 28 விக்கெட்டுகளை எடுத்த அனுபவம் கொண்ட ஸ்காட் போலண்ட் தான் இந்த ஃபைனலில் இந்தியாவுக்கு எதிராக விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் கூட அவரை விட அனுபவம் மிகுந்த ஜோஸ் ஹேசல்வுட் காயத்தால் வெளியேறியது நிச்சயமாக இந்தியாவுக்கு சாதகமாகவும் ஆஸ்திரேலியாவுக்கு பின்னடைவாகவும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Advertisement